”பெண்கள் மேம்பாட்டிற்காக எங்கள் அரசு பாடுபடும்...” மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து...!
இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திய நாட்டிலுள்ள மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். பெண்கள் மேம்பாட்டிற்காக எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும்” என குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து:
மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது, “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி" என்ற பாரதியின் பாடல் வரிகளை மகளிர் தினத்தில் நினைவு கூர்வோம். இன்று, வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து, அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்குத் தகுதியானவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இன்று, இளம் பெண் குழந்தைகளுக்கு சரியான கல்விச்சூழல் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள நமது தாய்மார்களுக்கு தங்கள் வீடுகளில் குடிநீர் வசதி, வீடுகளில் சமையல் எரிவாயு, வீட்டிலேயே கழிப்பறை போன்ற வசதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இன்று நமது மகள்கள் ஜெட் போர் விமானங்களில் பறக்கிறார்கள். இன்று நடப்பது உடல் பலத்தின் அடிப்படையிலான போர் அல்ல, மூளைகள் அடிப்படையிலானது, அதில் நம் பெண்கள் தங்களின் திறமையை நிரூபித்து மிளிர்கின்றனர். அப்படிசெய்யும்போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள்.
பெண் தொழில் முனைவோர், தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பணி வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு குடும்பத்தின் உந்து சக்தி. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பதாகவே சொல்வார்கள் ஆனால் ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும் ஒரு ஆண் இருப்பதாக நாம் கேள்விப்படுவதில்லை. இதைச் செய்வது, மனநிலையின் மாற்றத்திலிருந்து வருகிறது.
நமது மகள்கள் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் பல முறை கூறுகிறோம்.ஆனால், பெண்களை மரியாதையுடன் நடத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் சொல்லி வளர்ப்பதில்லை? இத்தகைய மனநிலை மாற்றம் மட்டுமே நிலைமையை மாற்றும்.
ஒரு கட்டடம் இடிக்கப்பட்டால், அதை புனரமைக்கலாம் ஆனால் ஒரு கலாசாரம் அழிக்கப்பட்டால், அதை மீண்டும் கட்ட முடியாது. இந்தக் களத்தில் பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்றவற்றைக் கற்கும் பெண் குழந்தைகள் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் அந்தச் சூழலில், பெண்கள் நமது கலை மற்றும் கலாசாரத்தின் பாதுகாவலர்கள என்பதில் சந்தேகமில்லை.
நமது பெண் குழந்தைகள் மற்றும் இளம் மாணவர்களை "ஆலமரத்தின் விதை போன்றவர்கள் நீங்கள்” என்று கூறி அவர்கள் மனதை வலுப்படுத்த வேண்டும். விதை சிறியதுதான் ஆனால் ஒரு மரம் அதற்குள்ளே உள்ளது. சாதிப்பதற்கு எல்லையே இல்லை, வானமே எல்லை, எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஊட்டி பெற்றோர் வளர்க்க வேண்டும். தங்கம் சுட்டால்தான் பிரகாசிக்கிறது, அதே போல் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது வலிமை பெறுவீர்கள். இடர்களை எதிர்கொள்வதும், அதை சந்திக்கும் நம்பிக்கையுடனும் இளம் தலைமுறையினர் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சவாலை சந்திக்கும் அனுபவத்திற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், அது உங்களில் சிறந்ததைக் காணவும் உங்களை வளர்க்கவும் உதவுகிறது.
குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும், அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல, வீட்டுக்கும்- நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகளை உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.
உங்கள் வளர்ச்சியில் உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள், நன்றாகப் படிக்க வேண்டும். சக ஆண் பிள்ளைகளை விட உங்களைக் குறைவாக நினைக்காதீர்கள். ஆண்களை விட பெண்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். பெண்கள் அதிக விவேகமுள்ளவர்கள், அதனால்தான் பெண்கள் தலைமைப் பதவிக்கு வரும்போது அவர்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். முக்கியமான விஷயங்களில் வழிகாட்டி முடிவெடுப்பவர்கள் பெண்கள்தான்." என தெரிவித்திருந்தார்.