Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: டாலருக்கு மாற்று என எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
Jaishankar Brics: டாலருக்கு மாற்றாக புதிய பணத்தை பயன்படுத்த முயன்றால், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சங்கர் சொன்னது என்ன?
அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, கத்தாரில் டோஹா ஃபோரம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தை ஆதரிக்கவோ முயலக் கூடாது என எச்சரித்த நிலையில் ஜெய்சங்கர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
டாலருக்கு மாற்றான கரன்சி?
புதிய கரன்சி தொடர்பாக பேசிய ஜெய்சங்கர், “இரு நாட்டின் நிர்வாகத்திற்கு இடையே ஒரு நல்ல உறவு இருந்தது. ட்ரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது மிகவும் உறுதியான உறவு இருந்தது. ஆம் சில சிக்கல்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளாக இருந்தன. ஆனால் சர்வதேச அளவிலான பல பிரச்னைகளும் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் இருந்தன. டிரம்பின் தலைமையின் கீழ் தான் QUAD அமைப்பு மீண்டும் உயிர்பெற்றது என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் இடையே தனிப்பட்ட உறவு உள்ளது. பிரிக்ஸ் கருத்துக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில், இந்தியா ஒருபோதும் டாலர் மதிப்பிழப்பை ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கூறியுள்ளோம். இப்போது பிரிக்ஸ் நாணயம் வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை. பிரிக்ஸ் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விவாதிக்கிறது. அமெரிக்கா எங்கள் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும், டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை:
முன்னதாக கடந்த வாரம் ட்ரம்ப் வெளியிட்டு இருந்த சமூக வலைதள பதிவில், “பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றான பணத்தை, வர்த்தகத்திற்காக பயன்படுத்தினால் அந்த நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும். அதோடு, வளமான அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். எனவே பிரிக்ஸ் நாடுகள் டாலரையே வர்த்தகத்திகு பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்கு மாற்று என்ற நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதியளிக்க வேண்டும்” என எச்சரித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்: வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்குதான்! தெரிஞ்சிக்கோங்க!