Census 2021 : 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி தகவல்கள் சேகரிக்கப்படாது - மத்திய அரச
இந்தியாவில், கடைசியாக சாதி வாரி தரவுகள் 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டன. இதில், ஓபிசிக்களின் மொத்த எண்ணிக்கை 52% என்று கணக்கிடப்பட்டது
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிறபிற்படுத்தப்பட்டோர் குறித்த விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பதிலில், " கொரோனா பொதுமுடக்க நிலையால் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஆணை, 1950 (பட்டியல் இனங்கள்) மற்றும் அரசியல் அமைப்பு ஆணை, 1950 (பட்டியல் பழங்குடியினர்) -ன் படி பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளும் பழங்குடிகளும் கணக்கெடுப்பில் அவ்வப்போது திருத்தி அமைக்கப்படுகின்றன. அரசியலமைப்பின்படி மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் பட்டியல் இனங்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினங்களுக்கு அவர்களது மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
2021-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பை மேற்கொள்வது பற்றிய அரசின் கருத்து 2019 மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலின, பட்டியல் பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளிலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்திலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2018 ஆகஸ்ட் 31ம் தேதி இந்திய மக்கள் தொகை பதிவாளர் அலுவலக அதிகாரிகளுடன் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி உலகின் மிகப்பெரிய பணியாக இருக்கும். முதன்முறையாக, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
2019 டிசம்பர் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை ரூ. 8754.23 கோடி செலவில் மேற்கொள்ளவும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ரூ.3941.35 கோடி செலவில் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ல் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும், வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு - 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரையிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது. அஸ்ஸாம் தவிர பிற மாநிலங்களில், தேசிய மக்கள் தொகை பதிவேடு(National Population Registers) உருவாக்கப்படும் என்றும் கூறியது. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
ஒபிசி:
இந்தியாவில், கடைசியாக சாதி வாரி தரவுகள் 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டன. இதில், ஓபிசிக்களின் மொத்த எண்ணிக்கை 52% என்று கணக்கிடப்பட்டது. இதன், அடிப்படையில் மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் 27% இடஒதுக்கீடு ஓபிசிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று மண்டல் ஆணைகுழு பரிந்துரைத்தது.
துணைப் பிரிவுகள்:
மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்காக 340வது சட்டப் பிரிவின் கீழ் மத்திய அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன்மூலம், இப்போதைய இதர பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தும், மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டில் பெரிய ஆதாயங்கள் எதுவும் பெறாத நிலையில் இருக்கும் பிரிவினருக்கு, பயன்கள் கிடைக்கும் என்று தெரிவித்தது . ஓ.பி.சி.களுக்கான மத்திய பட்டியலில் உள்ள இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பயன்தரும் வகையில் இந்த ஆணையம் பரிந்துரைகள் வழங்கும்.
இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக முதன்முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு 1955-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை 2,399; அவற்றில் 837 சாதிகள் மிகப் பிற்படுத்தப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை 3,743 என்று மண்டல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய குழப்பங்களை போக்குவதற்கும், துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்கும் சாதிவாரிக் கண்டக்கேடுப்புகள் அவசியம் என பல்வேறு சமூகவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் வாசிக்க: