Tamil Nadu Reservation Act: தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவான தரவுகளுடன் ABP நாடு ஸ்பெஷல்
1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76-வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
![Tamil Nadu Reservation Act: தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவான தரவுகளுடன் ABP நாடு ஸ்பெஷல் how Maratha Quota judgement impacts tamil nadu 69 per Cent Reservation Act 1994 Tamil Nadu Reservation Act: தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா? விரிவான தரவுகளுடன் ABP நாடு ஸ்பெஷல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/06/90df3dcb5c7d2e9bc046803ff0680458_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மராத்தா சாதியினருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டு வந்த 16% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் முன்னோடியாக விளங்கி, 1921 ம் ஆண்டு முதல் இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழ் நாட்டில், இந்த தீர்ப்பு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு புதிதாக அமையவுள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்தியாவில் இடஒதுக்கீடு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது?
பட்டியல் கண்ட சாதியினருக்கும், பட்டியல் கண்ட பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்த வகுப்பினருக்கும் இந்தியாவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
யார் பட்டியல் கண்ட சாதிகள்:
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பட்டியல் கண்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் 16.6% உள்ளனர். அரசியலமைப்பு பிரிவு 341ன் கீழ் குடியரசுத் தலைவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதிகளையோ, இனங்களையோ, பழங்குடிகளையோ பட்டியல் கண்ட சாதிகள் என்று பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம். பட்டியல் கண்ட சாதிகளை அறிவிப்பதற்கு மாநில அரசு நிர்வாகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதே போன்று, பழங்குடிகளில் அல்லது பழங்குடிச் சமூகத்தில் உள்ள பகுதிகளை பட்டியல் கண்ட பழங்குடியினர் என்று குடியரசுத் தலைவர் பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம். இந்தியாவின், மொத்த மக்கள்தொகையில் 8.6 % விழுக்காடு மக்கள் பட்டியல் கண்ட பழங்குடியினர் ஆவார். இந்த பிரிவை அறிவிப்பதற்கு மாநில அரசு நிர்வாகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.
இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி) என்றால் யார்?
அரசியலமைப்பு பிரிவு 15(4)ன் மூலம், குடிமக்களில் சமுதாய நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினரே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக, ஜாட் இன மக்கள் கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினராக இருந்தாலும், சமூக நிலையில் உயர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
இருப்பினும், அரசியலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ், அரசின் கீழுள்ள பணியிடங்களில் போதிய அளவிற்கு இடம் பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த பிரிவின் கீழ் அரசு பணியிடங்களில் போதிய அளவு இடம்பெறாமல் இருந்தால் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதமுடியும்.
மேலும், அரசியலமைப்பு பிரிவு 46, மக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப்புணர்வுடன் வளர்த்தல் வேண்டும் என்று கூறுகிறது. இந்த பிரிவின் கீழ் பார்த்தால், சாதியைத் தண்டி பெண்கள், திருநங்கைகள், கூலித் தொழிலாளர்கள் என பலரையும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதி கொள்ளலாம்.
இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினரை யார் தீர்மானிப்பது?
யார் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை இந்திய அரசியலமைப்பு தெளிவாக சொல்லவில்லை. இந்து மற்றும் இந்து அல்லாதவர் இரு தரப்பிலும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 52% பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருப்பதாக மண்டல் ஆணையக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
பட்டியலின, பழங்குடியின மக்களைப் போல் அல்லாமல், இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினரை மத்திய/ மாநில அரசுகள் தன்னிச்சையாக தீர்மானித்துக் கொள்கின்றன. மத்திய அரசு பணி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மத்திய பட்டியலும், மாநில அரசு பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாநில பட்டியலும் நிர்வகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு மாநிலத்தில் ஒபிசி பிரிவில் உள்ள நபர், மற்றொரு மாநிலத்தில் பொது பிரிவினராக இருக்கும் சூழ்நிலை உருவாகிறது.
மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே சாதிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தீர்மானிக்கின்றன. சாதிகளை வைத்துதான் ஒபிசி பிரிவினர் தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு எந்த இடத்திலும் சுட்டிக்காட்ட வில்லை என்றாலும், இந்த நடைமுறையைத் தான் மத்திய,மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் சாதிகளும், வகுப்புகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருப்பதாக இந்திரா சகானி வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குடிமக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடானது 50 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் மண்டல் ஆணைக்குழு வழக்கில் தீர்பளித்துள்ளது. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு நேரடியாக எந்த உச்சவரம்பையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1950களில் இருந்தே தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1990களில் இருந்து தான் மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் ஒ.பி.சி இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
102வது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் ?
இதற்கிடையே, கடந்த 2018 ம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கு” அரசியல் சட்ட தகுதி அளிக்கும் 102 வது அரசியல் சட்ட திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
மேலும், இச்சட்ட திருத்தத்தில் 342A என்ற புதிய பிரிவை உருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசுத் தலைவர் அறிவிப்பார் என்றும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது, இருக்கின்ற சாதிகளை நீக்குவது போன்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உட்பட்டது எனவும் கூறப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயார் செய்வதில் மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை இந்த சட்டத்திருத்தம் ஆக்கிரமிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு?
தமிகத்தில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
69% இடஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பானதா?
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவை சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினார். இந்த சட்ட முன்வடிவு, இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்டமாகியது (தமிழ்நாடு சட்டம் 45/1994). பின்னர் இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31-B-ன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் (76-வது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மராத்திய மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் எஸ்இபிசி சட்டத்தை இயற்றியது. மராத்தியர்கள் ‘சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர்" என்று அறிவிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மற்றும் பணிகளில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இச்சட்டம் மூலம், மாநிலத்தின் இடஒதுக்கீடுகளின் மொத்த பங்கு 68 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டைப் போல் எஸ்இபிசி சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு?
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு, எஸ்இபிசி சட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கீழ் காணும் கேள்விகளை எழுப்பியது?
இந்திரா சகானி தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட 50% உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?
102 – வது அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறதா?
மகாராஷ்ட்ராவில், 50% இட ஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கான நியாயப்படுத்தும் சூழ்நிலைகள் உள்ளனவா?
மேலும், இத்தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு நேற்று தனது தீர்ப்பில், " மராட்டிய மாநிலத்தில், கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டம் செல்லாது" என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், இந்திரா சகானி தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட 50% உச்சவரம்பை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்றும், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இதை பரிந்துரைக்க தேவையில்லை என்றும் நீதிபதிகள் ஒருமனதாக தெரிவித்தனர்.
மேலும், நீதிபதிகள் எல்.என். ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பாட் ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பில், “அரசியல் அமைப்புச் சட்டத்தின் 102-ஆவது திருத்தச் சட்டத்தில், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மாற்றங்கள் செய்ய, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கின்றது; மத்திய அரசின் பரிந்துரையில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின்படிதான் குடியரசுத் தலைவர் மாற்றங்களைச் செய்வார்; மாநிலங்கள் ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்; பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலை மாநில அரசுகள் திருத்தி அமைக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
ஆனால், நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் இருவரும், “சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் மாற்றம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் அதிகாரம் உண்டு என்றும், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த பட்டியலை மத்திய அரசு புதிதாக வெளியிட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
வன்னியர்கள் உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?
விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், " பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்திருத்தம் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மோடி அரசு மேல்முறையீடு செய்வது சந்தேகம்தான். நீதிமன்றத்தைப் பயன்படுத்தி சமூகநீதியை ஒழித்துக் கட்டும் பாஜக அரசின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு இப்போதாவது பாமக தனது அரசியல் தவறைத் திருத்திக் கொள்ளுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
9 விவர அட்டவணை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுமா?
அரசியலமைப்பு 31ஆ, நீதிமன்ற மறுஆய்வை விலக்கினாலும், ஒன்பதாவது அட்டவணையின் கீழ் உள்ள சட்டங்கள் அடிப்படை உரிமைகள் அல்லது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறினால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த காலத்தில் கூறியது. எனவே, தற்போது 50% உச்சவரம்பு சிறந்த அரசியலமைப்பு சட்டம தான் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதால், 9-வது விவர அட்டவணையில் உள்ள தமிழ்நாடு 69% இடஒதுக்கீடுச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)