அப்பாடா..! பிப்ரவரி 1 முதல் டோல் பிளாசாவில் புது ரூல்ஸ்.! வரிசைக்கு குட்பை- FASTag விதிகளில் புதிய மாற்றம்
பிப்ரவரி 1 முதல் டோல் பிளாசாவில் புதிய மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் குஷியில் உள்ளனர்.

டோல்பிளாசா - புதிய விதிமுறை
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1060 டோல் பிளாசாக்கள் உள்ளது. இதில் சுமார் 700 அரசு நிர்வகிக்கும் பிளாசாக்களும், 350 தனியார் நிர்வகிக்கும் பிளாசாக்களும் அடங்கும். இதில், டோல் கட்டணங்கள் வாகன வகை மற்றும் தூரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இதில் வாகனங்கள் நீண்ட நேரம் டோல் பிளாசாவில் நிற்பதை தவிர்க்கும் வகையில் FASTag அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஒரு டோல் பிளாசாவில் நுழைவு கட்டணமாக 75 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் FASTag ஆண்டு பாஸ் திட்டத்தையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்டு கட்டணமாக 3000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. 200 டோல் பிளாசாக்கள் வரை (அல்லது 1 ஆண்டு) வரை செல்லலாம். இதன் காரணமாக ஒரு டோலுக்கு 15 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புது ரூல்ஸ்
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பயணம் செய்யும் பல கோடி வாகனங்களுக்கு நிம்மதி அளிக்க கூடிய வகையில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 1, 2026 முதல், புதிய கார், ஜீப் மற்றும் வேன் வகை வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்குவதில் இருந்து KYV சரிபார்ப்பு நடைமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை டோல் பிளாசாவில் விரைவாக பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் பாஸ்டேக் வாங்குவதற்கு KYV சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக அவசர தேவைக்காக வெளியூர் செல்லும் போது பாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பின்னரும் அது பல மணி நேரம் ஏன் பல நாட்கள் வரை செயல்படாத காரணத்தால் வாகன உரிமையாளர்கள் சிரமத்தை சந்தித்தனர்.
KYV சரிபார்ப்பு கட்டாயம் இல்லை
இதனால் டோல் பிளாசாக்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி பிறகு வாங்கப்படும் பாஸ்டேக்களுக்கு KYV சரிபார்ப்பு நடைமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைப்படி, வாகன ஓட்டிகளின் வங்கிகள் வாகனத்தின் விவரங்களை முதலில் அரசு வாகன தரவுத்தளத்தில் செக் செய்யும்.
அதில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், பாஸ்டேக் உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சரிவர விவரம் இல்லையென்றால் பதிவு சான்று (RC) மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஆன்லைன் வழியாக வாங்கப்படும் பாஸ்டேக்-களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு மூலம் புதிதாக வாகனங்கள் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.





















