Ajith Pawar : முக்கிய அமைச்சர் பதவிகளை தட்டித்தூக்கிய அஜித் பவார்.. விழி பிதுங்கும் ஏக்நாத் ஷிண்டே.. கையை விரித்த பாஜக
தேசியவாத காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தில் இணைந்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி தலைவர்கள் அதிருப்தில் இருந்ததாக தகவல் வெளியானது.
மகாராஷ்டிராவில் தொடர் அரசியல் திருப்பம்:
மகாராஷ்டிர அரசியலில் சமீபத்தில் உச்சக்கட்ட திருப்பம் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தில் இணைந்ததால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி தலைவர்கள் அதிருப்தில் இருந்ததாக தகவல் வெளியானது. தங்களிடம் உள்ள முக்கியமான அமைச்சகங்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என அவர்கள் கவலையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
கலக்கத்தில் சிவசேனா கட்சி தலைவர்கள்:
இதனால், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் பேசி வருவதாத கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், பாஜக மூத்த தலைவர்களிடம் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், அமைச்சர்களாக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சி தலைவர்கள் அச்சப்பட்ட படியே, முக்கியமான அமைச்சகங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சர் பதவிகளை தட்டி தூக்கிய தேசியவாத காங்கிரஸ்:
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகம் அளிக்கப்பட்டுள்ளது. தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயமும் வால்ஸ் பாட்டீலுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. சாகன் புஜ்பலுக்கு உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அதிதி தட்கரேவுக்கும் மறுவாழ்வு, அனில் பாட்டீலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப்புக்கு மருத்துவக் கல்வியும், சஞ்சய் பன்சோடிற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகமும் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட அப்துல் சத்தாருக்கு சிறுபான்மை நல அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்த கிரிஷ் மகாஜனுக்கு கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தைப் பெற்றுள்ளார்.
தாதா பூஸ் பொதுப்பணித் துறையையும், சுரேஷ் காடே தொழிலாளர் அமைச்சகத்தையும், தானாஜி சாவந்த் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலனைத் தக்க வைத்துக் கொண்டனர். அதுல் சேவுக்கு வீட்டுவசதி அமைச்சகம் தரப்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட அரசியல் மாற்றம் நடந்திருப்பது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.