மும்பை கார் விபத்து.. திடீர் திருப்பமாக காவல்நிலையத்தில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளி!
மும்பை BMW கார் விபத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மிஹிர் ஷாவை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் வேகமாக ஓட்டி வரப்பட்ட BMW கார், தம்பதியினர் வந்த பைக்கின் மீது மோதியதில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டது. இதில், பைக்கில் வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய மும்பை கார் விபத்து: சிக்கிய அரசியல்வாதியின் மகன்: சமீபத்தில்தான், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போர்சே சொகுசு காரை ஓட்டி 17 வயது மைனர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷாதான், இந்த விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
விபத்து நடந்து 48 மணி நேரமாகியும் மிஹிர் ஷா கைது செய்யப்படாமல் இருந்தது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், தனது வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு வந்த மிஹிர் இன்று சரண் அடைந்துவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சிக்கிய அரசியல்வாதியின் மகன்: இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மிஹிரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரை மும்பைக்கு அழைத்துச் செல்லும் பணி நடந்து வருகிறது" என்றார்.
விபத்து நடந்தது எப்படி? வொர்லியின் கோலிவாடா பகுதியைச் சேர்ந்த காவேரி நக்வாவும், அவரது கணவர் பிரதிக் நக்வாவும் அதிகாலை 5:30 மணியளவில் மீன் பிடிக்க சாசூன் டாக்கிற்குச் சென்றனர். பிடித்த மீன்களை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் பின்னால் வேகமாக வந்த BMW கார் மோதியது.
இதில் காரின் டயருக்கு அடியில் காவேரி நக்வா சிக்கி கொண்டுள்ளார். டயரில் பெண் சிக்கி இருந்தபோதிலும், ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு மிஹிர் ஷா காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய காவல்துறை தரப்பு, "விபத்து நடந்ததை தொடர்ந்து டிரைவரை அவரது இருக்கையில் அமர வைத்துவிட்டு வேறு இருக்கைக்கு மாறியுள்ளார் மிஹிர் ஷா.
இதையடுத்து, தந்தை ராஜேஷ் ஷாவை தொடர்பு கொண்டுள்ளார். அவரை தப்பியோடச் சொல்லிவிட்டு, விபத்துக்குப் பொறுப்பேற்குமாறு டிரைவரை அறிவுறுத்தியுள்ளார் ராஜேஷ் ஷா" என்றார்.
இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் ஓட்டுநர் பிதாவத் இருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று, ராஜேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், பிடாவத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 11 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, வெளிநாட்டுக்கு தப்பி செல்லாத வகையில் மிஹிர் ஷாவுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.