மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் முல்லை பெரியாறு விவகாரம்! கேரளா மீது தமிழ்நாடு பரபரப்பு குற்றச்சாட்டு!
முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
கடந்த 1887 முதல் 1895 வரையிலான கால கட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது இந்த அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது.
ஆனால், இந்த அணையை தமிழ்நாடு பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி ஆகும். நீர் பாசனத்திற்காக தமிழ்நாட்டின் வைகை ஆற்று படுகைக்கு இந்த அணையின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
முல்லை பெரியாறு விவகாரம்:
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடர் புகார் கூறி வருகிறது. ஆனால், அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறி வருகிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே தொடர் பிரச்சினை நிலவி வருகிறது.
தற்போது, அணையை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அணையை சுற்றி இருக்கும் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி கேரளாவால் வழங்கப்பட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதேபோல, பிரதான அணையில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வசதியாக 15 மரங்களை வெட்ட அனுமதி கோரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கேரளா மீது தமிழ்நாடு பரபர குற்றச்சாட்டு:
இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை தாக்கல் செய்த மனுவில், "ஒருபுறம் அணையின் விரிவான பாதுகாப்பு பிரச்சினைகளை கேரள அரசு எழுப்பினாலும், மறுபுறம் எஞ்சியிருக்கும் பலப்படுத்தும் பணிகளை முடிப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல தமிழ்நாட்டுக்கு அனுமதியை வழங்காமல் தடையாக உள்ளது.
பெயின்டிங், பேட்ச் ஒர்க்ஸ், பணியாளர்கள் குடியிருப்புகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட வழக்கமான வருடாந்திர பராமரிப்புப் பணிகளை செய்ய விடாமல் இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கும் மேலாக கேரளா தாமதப்படுத்தியுள்ளது.
அணை பாதுகாப்புச் சட்டம், 2021இன் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு அதிகாரம் பெற்றிருந்தாலும், அணையைப் பலப்படுத்தவும், பாதுகாப்பு தொடர்புடைய பணிகளை அனுமதிப்பதை உறுதி செய்வதில் மோசமாகத் தவறிவிட்டது.
அணையை பலப்படுத்த, சமநிலையை வலுப்படுத்த மேற்கொள்ளும் பணிகளுக்கு வனத்துறையின் அனுமதி தேவை என்று கேரளா கூறியுள்ளது. ஆனால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதில் இடையூறாக புதிய முறையை கேரளா கண்டுபிடித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என கேரள அரசு கடந்த 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.