Rahul Gandhi Yatra : ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? என்ன செய்யபோகிறது காங்கிரஸ்?
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பேலஸ் மைதானத்தில் இருந்து யாத்திரையை தொடங்க காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
![Rahul Gandhi Yatra : ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? என்ன செய்யபோகிறது காங்கிரஸ்? Manipur Government denies permission to Rahul Gandhi Bharat Jodo Nyay Yatra rally from Imphal palace ground Rahul Gandhi Yatra : ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? என்ன செய்யபோகிறது காங்கிரஸ்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/24a2172f27c55ad79a97ef04dcc121ef1704890386412729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்றொரு யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வந்தது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. அதன்படி, வரும் 14ஆம் தேதி மணிப்பூரில் யாத்திரையை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்ளவார் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராகுல் காந்தி யாத்திரைக்கு வந்த சிக்கல்:
இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை ( இந்திய ஒற்றுமை நீதி பயணம்) என பெயரிடப்பட்டது. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும் அதை தொடர்ந்த நடந்து வரும் வன்முறை சம்வபங்களாலும் மணிப்பூர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது பெரிய கேள்வியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பேலஸ் மைதானத்தில் இருந்து யாத்திரையை தொடங்க காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபால் கூறுகையில், "இன்று காலை, இம்பாலில் உள்ள பேலஸ் மைதானத்தில் இருந்து பாரத் ஜோடோ நீதி யாத்திரையை தொடங்க மணிப்பூர் அரசு அனுமதி மறுத்துள்ளது. நாங்கள் மாற்று இடத்தில் இருந்து யாத்திரையை தொடங்க திட்டமிட்டு வருகிறோம். ஆனால், இம்பாலில் இருந்தே யாத்திரையை தொடங்குவோம்" என்றார்.
பேலஸ் மைதானத்தில் யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
இதுகுறித்து மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா கூறுகையில், "இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்க நாங்கள் முதலமைச்சர் என் பிரேன் சிங்கை சந்தித்து அனுமதி கோரினோம். அங்கிருந்து பேரணியை கொடியசைத்து தொடங்க திட்டமிட்டோம். ஆனால், அதற்கு முதல்வர் அனுமதி மறுத்துவிட்டார்" என்றார்.
மணிப்பூரில் தொடங்கப்படும் யாத்திரை நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில், பல தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
எதிர்கட்சி தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், எழுத்தாளரும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மனித உரிமை ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டது குறிப்படத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)