Manipur Violence : தொடரும் வன்முறை... மணிப்பூரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு... மக்கள் தவிப்பு...!
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடந்து ஒரு மாதமாகியும் அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Manipur Violence : மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடந்து ஒரு மாதமாகியும் அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர்.
எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரம் வெடித்ததில் இருந்து இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,000க்கும் மேற்ப்பட்டோர் தங்களின் ஊர்களில் இருந்து வெளியேறி ராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் விரைந்த அமித்ஷா
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மாநிலத்திற்கு கடந்த 29ஆம் தேதி வருகை புரிந்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இந்த கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைதி குழு ஒன்று மாநில ஆளுநர் தலைமையில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், அங்கு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு
இருப்பினும் அங்கு கலவரம் நடந்து ஒரு மாதம் காலமாகியும் அம்மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. அதேபோன்று, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் பல பெட்ரோல் பங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். திறந்திருக்கும் ஒரு சில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேபோன்று, அரிசி விலை 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் 30 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 15 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், முட்டை விலை 6 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதற்கிடையில், உயர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்பால் - திமாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். தடுப்புகளை அகற்றினால் தான் காய்கறிகள், மருந்துகள், பெட்ரோல், டீசல் மக்களுக்கு சென்றடையும் என்று அமித்ஷா நேற்று கூறியிருந்தார்.