’மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்’ - சரத் பவார் ஆலோசனை
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் யாருக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 46 பேர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவின் குதிரை பேரத்தில் விலை போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக எம்.எல்.ஏக்களுக்கு தான் முதலமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை என்றால் பதவி விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், முதலமைச்சர் இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து ஜூன் 22ஆம் தேதி இரவு தன் குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே வெளியேறினார்.
சரத் பவார் கருத்து
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போது பாஜக ஆளும் அஸ்ஸாமில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசேனா கூட்டணியில் உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் முன்னதாகக் கூறியதாவது:
”சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் குஜராத்திலும், சிலர் அசாமிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜக ஆளும் மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும். அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் யாருக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.