Ahilya Nagar : தொடரும் பெயர் மாற்றும் படலம்...மற்றொரு நகரத்தின் பெயரும் மாற்றம்.. முதலமைச்சர் ஷிண்டே அறிவிப்பு..!
மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்ற வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டது.
தொடரும் பெயர் மாற்றும் படலம்:
முன்னதாக, இது முகலாயர் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, நாட்டின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக உள்ள ஹைதராபாத்துக்கு பாக்கியநகர் என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்ற வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார்.
மராட்டிய மால்வா சாம்ராஜ்யத்தின் ஹோல்கர் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் நினைவு நாள் நிகழ்ச்சி அகமதுநகரில் நடைபெற்றது. (இந்தியா முழுவதும் கோயில்கள் மற்றும் தர்மசாலைகளை (பொது ஓய்வு இல்லங்கள்) கட்டுவதில் இவர் முக்கிய பங்காற்றினார்). மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே, துணை முதலமைச்சர் பட்னாவிஸ், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
"அகமத்நகருக்கு அஹல்யாநகர் என பெயர் மாற்ற வேண்டும்"
அப்போது பேசிய பட்னாவிஸ், "ராஜமாதா அஹில்யாதேவி ஹோல்கர் இல்லாவிட்டால் காசி இருந்திருக்காது. அவர் இல்லாவிட்டால் சிவன் கோயில்கள் இருக்காது. அதனால்தான் அகமத்நகரை அஹல்யாநகர் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது குறித்து முதலமைச்சரக் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் கோரிக்கை விடுக்க உள்ளேன்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் நாமத்தை உச்சரிக்கும் மக்கள் நாம். உங்கள் (ஷிண்டே) தலைமையில் நாங்கள் சம்பாஜிநகரை உருவாக்கினோம். தாராஷிவை உருவாக்கினோம். நமது முதலமைச்சர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிப்பாய். எனவே, அகமதுநகருக்கு அஹல்யாநகர் என்று பெயர் மாற்றப்படும் என்று நான் நம்புகிறேன்" என்றார். பட்னாவிஸின் கோரிக்கையை ஏற்ற ஷிண்டே, அகமதுநகருக்கு அகல்யாநகர் என பெயர் மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.
அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்களை சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மகாராஷ்டிர அரசின் முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசின் பெயர் மாற்றும் படலத்தின் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கிங்ஸ்வே சாலைக்கு ராஜ்பாத் சாலை என்றும் குயின்ஸ்வே சாலைக்கு ஜன்பத் சாலை என்றும் பெயர் மாற்றப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் வைஸ்ராயின் பெயரை கொண்டிருந்த மிண்டோ பூங்காவின் பெயர் ஷாஹீத் பகத் சிங் உத்யன் என மாற்றப்பட்டது.
மற்றொரு கவர்னர் ஜெனரலின் பெயரை கொண்டிருந்த ஆக்லாந்து சதுக்கம், பெஞ்சமின் மோலோயிஸ் சதுக்கமாக பெயர் மாற்றப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் மைசூரு - பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸை உடையார் எக்ஸ்பிரஸாக ரயில்வே பெயர் மாற்றியது. அதேபோல, மைசூருவில் இருந்து தலகுப்பா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கவிஞர் குவேம்புவின் பெயர் சூட்டப்பட்டது.