Govt Job: 'இருப்பது 15...வந்தது 11 ஆயிரம்' - வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய பலே சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் வெறும் 15 பேர் மட்டுமே தேவைப்படும் பியூன் உள்ளிட்ட வேலைகளுக்கு 11 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் சென்றிருந்தது அங்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வெறும் 15 பேர் மட்டுமே தேவைப்படும் பியூன் உள்ளிட்ட வேலைகளுக்கு 11 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் சென்றிருந்தது அங்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் பியூன்கள், ஓட்டுநர்கள் மற்றும் காவலாளிகளுக்கான பதினைந்து வேலை வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டத்தட்ட 11,000 வேலையற்ற இளைஞர்கள் விண்ணப்பங்களுடன் சென்றுள்ளனர். இதில் மத்திய பிரதேசத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர்.
இந்த வேலைகளுக்கான கல்வித்தகுதி வெறும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பதாரர்கள் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏக்கள் மற்றும் சிவில் நீதிபதி ஆர்வலர்களாக இருந்தனர்.
இதில் அஜய் பாஹல் என்ற விண்ணப்பதாரர் பேசுகையில், “நான் அறிவியல் படித்த பட்டதாரி. நான் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். பி.ஹெச்.டி படித்தவர்களும் இந்த வரிசையில் நிற்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
சட்டம் படித்த பட்டதாரி ஜிதேந்திர மௌரியா கூறுகையில், “நான் டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். நீதிபதி தேர்வுக்கும் தயாராகி வருகிறேன். நான் மாதவ் கல்லூரியைச் சேர்ந்தவன். சில சமயங்களில் புத்தகங்கள் வாங்க பணம் இல்லாத நிலை உள்ளது. அதனால கொஞ்சம் வேலை கிடைக்கும் என்று நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அல்தாப் என்பவர் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில், “நான் பட்டதாரி. உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மத்திய பிரதேசத்தில் வேலைகளை உருவாக்கி அதை மாநில இளைஞர்களுக்கே வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் அறிவிப்பை இந்த சம்பவம் கேள்விக்குறியாக்கி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் மொத்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 32,57,136. பள்ளிக் கல்வித் துறையில் 30,600 பணியிடங்களும், உள்துறையில் 9,388 இடங்களும், சுகாதாரத் துறையில் 8,592 இடங்களும், வருவாய்த் துறையில் 9,530 பணியிடங்களும் காலியாக உள்ளன. மாநில அரசின் பல்வேறு துறைகளில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்