கம்யூனிசத்தில் மலர்ந்த காதல் - பெற்றோர்களிடம் இருந்து ஓராண்டு போராட்டத்திற்கு பின் குழந்தையை மீட்ட தாய்
அனுபாமாவின் சகோதரியின் திருமணம் முடிந்தபிறகு குழந்தையைத் தருகிறேன் என அனுபமாவின் குழந்தையை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி பிரித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேரூர்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவர் சி.பி.எம் ஏரியா கமிட்டி உறுப்பினரான உள்ளார். இவரது மகள் அனுபமா. SFI அமைப்பின் பொறுப்பில் இருந்த போது அனுபமாவுக்கும், DYFI நிர்வாகி அஜித் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அஜித்க்கு ஏற்கனவே வேறு பெண்ணுடன் திருமணம் ஆகி முறையாக விவகாரத்து கிடைக்க காத்திருந்தார், ஆனால் அவர் விவகாரத்து பெறுவதற்கு முன்னர் அனுபமா கர்ப்பம் ஆகியுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2020 ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அனுபமா. அனுபமாவின் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. மேலும், அனுபாமாவின் சகோதரியின் திருமணம் முடிந்தபிறகு குழந்தையைத் தருகிறேன் என அனுபமாவின் குழந்தையை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி பிரித்துள்ளனர். ஆனால் சகோதரியின் திருமணம் முடிந்தபிறகும் குழந்தையை பெற்றோர் கொடுக்கவில்லை.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிய அனுபமா, அஜித்துடன் சேர்ந்து வசித்தார். பின்னர் தனது குழந்தையை மீட்க வேண்டும் எனக் கேட்டு சி.பி.எம் நிர்வாகிகள், டி.ஜி.பி, முதல்வர் என அனைவரிடமும் முறையிட்டுள்ளார். மேலும் பேரூர்கடை காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனாலும் அவருக்கு குழந்தை கிடைக்கவில்லை. அதேசமயம் குழந்தையை ஆந்திரா மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்டதாக அனுபாமாவின் பெற்றோர் தகவல் தெரிவிக்க அதிர்ச்சியில் உறைந்த அனுபமா தனது குழந்தையை மீட்க ஆறு மாதங்களாக மறைமுகமாக நடத்திய போராட்டத்தில் வெற்றி கிடைக்காததால் மீடியாக்கள் மூலம் தனது பிரச்னையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். அதன் பிறகு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி குழந்தை காணாமல் போனதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையையும் தொடங்கினர். கேரளா அரசு சார்பில் அனுபமாவின் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி திருவனந்தபுரம் குடும்பநலக் கோர்ட்டில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து குடும்ப நல கோர்ட் அனுபமாவின் குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதற்கு இடைக்கால தடைவிதித்தது. மேலும் குழந்தையை மீட்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கியது. விரைந்து குழந்தையை மீட்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்புக்குழு அலுவலகம் முன் அனுபமா தொடர் போராட்டம் நடத்திவந்தார். மேலும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மாநிலத்துக்குள் குழந்தையை தத்துக்கொடுக்கலாம். மாநிலத்த்துக்கு வெளியே குழந்தையை தத்துக்கொடுக்க உரிமம் இருக்கிறதா என்ற அனுபமாவின் கேள்வி விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுபமாவின் குழந்ததை ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் பாளையத்தில் உள்ள நிர்மலா சிசு பவனில் குழந்தை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திங்களன்று குழந்தை மற்றும் அனுபமா, அஜித் ஆகியோரது டி.என்.ஏ பரிசோதனைக்கான சாம்பிள் எடுக்கப்பட்டது. ராஜிவ்காந்தி செண்டர் பார் பயோடெக்னாலஜி இன்ஸ்டியூட்டில் சாம்பிள் எடுக்கப்பட்டு நேற்று அதற்கான ரிசல்ட் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை முடிவில் அது அனுபமா மற்றும் அஜித்தின் குழந்தை என்பது உறுதியானது. இதையடுத்து அனுபமா குழந்தையை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அவரது ஆசை நிறைவேற்றும் விதமாக குழந்தையைக் காண நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. நிர்மலா சிசு பவனுக்கு அனுபமா மற்றும் அஜித் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். குழந்தையை பார்ப்பதற்காக செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
குழந்தையை பார்த்துவிட்டு வெளியே வந்தபிறகு கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய அனுபமா, "குழந்தையை காண வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். குழந்தையை பார்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த ரிப்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைப்பதாகவும், குழந்தையை ஒப்படைப்பது பற்றி கோர்ட் முடிவு செய்யும் எனவும் குழந்தைகள் பாதுகாப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கோர்ட்டு மூலம் விரைவில் என் குழந்தை என்னிடம் சேரும் என நம்புகிறேன். என கூறினார். இந்த தாயின் விடா முயற்சியும் போராட்டமும் தான் அவரது குழந்தையுடன் அவரை சேர வைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை இந்த வெற்றியை கேரளா மக்கள் கொண்டாடி வருகின்றனர்.