I.N.D.I.A Bloc: மும்பையில் I.N.D.I.A கூட்டணி கூட்டம்.. 28 தலைவர்கள் சங்கமம், இன்று வெளியாகப்போகும் முக்கிய முடிவுகள் என்ன?
மும்பையில் தொடங்கி நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.
மும்பையில் தொடங்கி நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளன.
I.N.D.I.A கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரு அணியில் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. அதைதொடர்ந்து, பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து, கூட்டணியின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.
தலைவர்கள் பங்கேற்பு:
சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 28 அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற விருந்து நேற்று நடைபெற்றது.
ஸ்டாலின் வலியுறுத்தல்:
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் “முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தொகுதீப் பங்கீட்டை முடிக்க வேண்டும். விரைவில் பொதுவான் செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும்” என முதலமைச்சர்கள் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கான லோகோ, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. I.N.D.I.A கூட்டணிக்கு என பொதுவான ஒரு சமூக வலைதள குழுவை உருவாக்க முடிவு மற்றும் அடுத்த ஆலோசனைக் கூட்டம் எங்கு நடத்தலாம் எனவும் விவாதித்ததாக தெரிகிறது.
லோகோ என்ன?
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கு அதில் உள்ளா எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் லோகோவை வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக 9 லோகோக்கள் உருவாக்கப்பட்டு, அதில் 3 லோகோக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளனர்.
பாஜக விமர்சனம்:
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அதன்படி, ”இந்திய அணிக்கு பொதுவான சித்தாந்தமும் தலைவரும் இல்லை என்றும், ஊழல் விசாரணையில் இருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் தான் இவர்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுவதற்கு முன், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.