Uniform Civil Code: நாடாளுமன்ற தேர்தல்.. பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்த பாஜக.. மத அமைப்புகளிடம் கருத்து கேட்பு
பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டிருப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பொது சிவில் சட்டம் - கருத்து கேட்பு
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் விரிவான எண்ணங்கள் தொடர்பாக அறிய இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் வரும் ஜுலை 14ம் தேதி வரையில் membersecretary-lci@gov.in எனும் முகவரிக்கு மெயில் மூலமாக தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிதாக கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஏனெனில் பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்த 3 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் புதிதாக கருத்து கேட்கப்படுவது அவசியமாகிறது” சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு:
பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் கருத்து கேட்கும் நடவடிக்கை என்பது, தங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்துதற்கும், தொடர் தோல்விகளை மறைப்புதற்குமான நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அரசின் ஒரு நடவடிக்கை என காங்கிரஸ் சாடியுள்ளது.
பாஜகவின் நோக்கம் என்ன?
2014 மற்றும் 2019 என இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதி பொது சிவில் சட்டம். நேரு பிரதமரான காலகட்டத்தில் இருந்தே விவாதிக்கப்பட்டு வரும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் என இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பாஜக அரசு மீண்டும் பொது சிவில் சட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த தொடங்கியுள்ளது.
சட்ட ஆணையம் சொன்னது என்ன?
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது. அதேபோல் பல மாநிலங்களில் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை கொண்டு வர நாடு முழுக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். பல்வேறு மதங்கள் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற விஷயங்களில் தங்களுக்கு என்று தனி தனி சட்டங்களை வைத்து இருக்கின்றன. அவற்றை நீக்கி மொத்தமாக சிவில் சட்டம் கொண்டு பொது சிவில் சட்டம் வழிவகுக்கும்.