பீகாரின் சின்ன தம்பி பெரிய தம்பி.. மீண்டும் கூட்டணி மாறுகிறாரா நிதிஷ் குமார்.. பதறும் மோடி!
இந்தியா கூட்டணியில் இணைவதற்கான கதவுகள் நிதிஷ் குமாருக்கு திறந்தே இருப்பதாக லாலு பிரசாத் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் மீண்டும் இணைய நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு நிதிஷ் குமார் எதிர்வினையாற்றி இருப்பது தேசிய அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் தந்தது. தொடரந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை.
மீண்டும் இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார்?
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சி நடத்த வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு அதற்கு தேவைப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தாண்டின் இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், மீண்டும் கூட்டணி மாற தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ் குமாரை இந்தியா கூட்டணியில் மீண்டும் இணைக்க பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத், பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கணக்கு போட்டு கதையை முடிக்கும் லாலு:
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இணைவதற்கான கதவுகள் நிதிஷ் குமாருக்கு திறந்தே இருப்பதாக லாலு பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார், "என்ன சொல்கிறீர்கள்" என கேட்டுவிட்டு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
மத்தியில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு நிதிஷ் குமாரின் ஆதரவு மிக முக்கியம். இம்மாதிரியான சூழலில், பீகார் சட்டமன்ற தேர்தல் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வரும் நிதிஷ் குமார், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வேளாண் துறை தொடங்கி ரயில்வே வரை பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தவர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து முதல்முறையாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: UGC NET 2024: உதவித்தொகை, பிஎச்.டி. சேர்க்கை; யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?