Rahul Gandhi marriage: இப்போ கூட ஒன்னும் லேட் ஆகல..கல்யாணம் பண்ணிக்கோங்க..ராகுல் காந்தியை வெட்கப்படவைத்த லாலு பிரசாத்...செய்தியாளர் சந்திப்பில் கலகல..!
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்த கருத்து அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
சிரிப்பலைகளை ஏற்படுத்திய லாலு பிரசாத்:
இதில், கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்த கருத்து அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும் என அவர் கூற, கூடியிருந்த தலைவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
"எனது ஆலோசனைகளை ராகுல் காந்தி ஏற்பதில்லை. அவருக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் தாமதமாகவில்லை" என லாலு பிரசாத் கூறினார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "நீங்கள் சொன்னதால். அது நடக்கும்" என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பல தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
"சிந்தாந்த அடிப்படையில் யுத்தம் தொடங்கியுள்ளது"
அப்போது, மம்தா கூறுகையில், "அமலாக்கத்துறை, சிபிஐ முகமைகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. சிம்லாவில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவது குறித்து விரிவாக விவாதிப்போம். பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம்” என்றார்.
இதற்கிடையே பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், 2024 தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது ஒரு நேர்மறையான சந்திப்பாகும். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அடுத்தாண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போட்டியிட ஒப்பு கொண்டோம். இந்த பொதுக் கூட்டணியின் வழிமுறைகள் குறித்து இறுதி செய்ய அடுத்த மாதம், சிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வர். அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் போது எப்படி ஒன்றாக பணியாற்றுவது என்பது குறித்த திட்டம் தீட்ட ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் சந்திப்போம்" என்றார்.
காங்கிரஸ் அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன் அதன்படி செயல்பட்டு வருகிறோம். தற்போது நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் இந்த கூட்டம் பாஜகவை வீழ்த்துவதற்கானது. தெலங்கானா , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜகவை இனி எங்குமே பார்க்க முடியாது. காங்கிரஸ் ஏழைகளுடன் இருக்கிறது அதனால் வெற்றி பெறுவோம். ஆனால் பாஜகவோ பணம் படைத்த சிலருடன் உள்ளது" என்றார்.
Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial