Kumbh Mela Fake Covid 19 : கும்ப மேளாவில் கோவிட் பரிசோதனைகள் போலியானவை : சுகாதாரத்துறை தகவல்..!
ஜனவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை 90 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கங்கையில் புனித நீராடியதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது
2021 இந்தியா கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைப்பெற்ற கும்பமேளா நிகழ்வின் போது நடத்தப்பட்ட பல லட்சக்கணக்கான கொரோனா பரிசோதனைகள் போலியானவை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களில் ஷாகி ஸ்நானங்கள் (ராஜ குளியல்) நடைபெற்றது. இதில், கொரோனா பரவல் காரணமாக கடைசி குளியல் வெறும் அடையாளமாக மட்டுமே நடைபெற்றது.
ஜனவரி 14ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை 90 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கங்கையில் புனித நீராடியதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. இதில், பெரும்பாலான பக்தர்கள் (குறைந்தது 60 லட்சம் பேர்) இந்தியாவை தாக்கிய கொரோனா இரண்டவாது பரவல் காலத்தில் (ஏப்ரல்) கங்கையில் நீராடியுள்ளனர்.
இந்நிலையில், கும்பமேளா நிகழ்வின் பொது மேற்கொள்ளப்பட்ட லட்சக்கணக்கான கொரோனா பரிசோதனைகள்போலியானவை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, அம்மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் பக்தர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரகாண்ட மாநில சுகாதாரத் துறை 22 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது. கும்பமேளாவின் போது, இந்த தனியார் ஆய்வகங்கள் மேற்கொண்ட 4 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளில், முக்கால்வாசி பரிசோதனை முடிவுகள் போலியானவை என்று அம்மாநில சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. மேலும், பக்தர்களிடம் இருந்து ஆதார் அடையாள எண், தொலைபேசி எண் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு, போலியான கொரோனா தொற்று இல்லை - சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, கும்பமேளா சுகாதார அதிகாரி அர்ஜுன் சிங் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்," ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளா பகுதியில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள 9 தனியார் நிறுவனங்களை நிர்வாகம் அணுகியது. கடந்த, ஏப்ரல் மாதத்தில் மேளா நடைபெற்ற இடங்களில் 2.51 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 44,000 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளும், 2.07 லட்சம் விரைவான ஆன்டிஜென் சோதனைகளும் அடங்கும்” என்று தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் எல்லைப் பகுதிகளிலும், நகர்புறங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறை சார்பில் 13 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டு ஷாகி ஸ்நானங்கள் (ராஜ குளியல்) நடைபெற்று முடிந்திருப்பதால், கும்பமேளாவை அடையாளமாக நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 17ம் தேதி, வேண்டுகோள் விடுத்தார். அந்த காலகட்டத்தில், இந்தாயவின் தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்துக்கும் அதிகமான எணிக்கையில் இருந்தது. தினசரி, நாடுமுழுவதும் 2000க்கும் அதிகமான கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வந்தது.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று பதிலளித்த மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி, ஸ்நானத்தில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரவேண்டாம் என்றும், கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.