May 1 - Labour Day History: உழைக்கும் வர்க்கத்தை போற்றும் நாள்..! தொழிலாளர் தினம் பிறந்த வரலாறு தெரியுமா..?
Labour Day History: இந்தியாவில், முதல்முறையாக மே தினம் 1923ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி அன்று மதராஸில் (தற்போது சென்னை) கொண்டாடப்பட்டது.
May 1 - Labour Day 2023: தொழிலாளர்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை போற்றும் வகையிலும் மே தினம் (May Day) (உழைப்பாளர்கள் தினம்), ஒவ்வொரு ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எட்டு மணி நேர பணி, எட்டு மணி நேர பொழுதுபோக்கு, எட்டு மணி நேர ஓய்வு என்பதை நோக்கி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.
உழைப்பாளர் தினம்:
தொழிலாளர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக சுரண்டப்பட்டு வந்த நிலையில், உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான போராட்டத்தின் விளைவாக 8 மணி நேரம் மட்டுமே பணி என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னாட்களில், உழைப்பாளர்கள் தினம் கொண்டாடுவதற்கு, 8 மணி நேர பணிக்காக நடத்தப்பட்ட போராட்டமே காரணமாக அமைந்தது.
சில நாடுகளில் தொழிலாளர்கள் தினம் உழைப்பாளர்கள் தினம்(Labour Day) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள், உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது
தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கமே, உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான முயற்சிகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரிவிப்பதும், சுரண்டலுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.
இந்தாண்டு தொழிலாளர் தினம் எப்போது?
இந்த ஆண்டு தொழிலாளர் தினம், வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் தினத்தின் வரலாறு:
தொழிலாளர் தினத்தின் வரலாறு, 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு, எட்டு மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்ய, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மே 1 ஆம் தேதி தொடங்கிய போராட்டம், அமெரிக்காவின் சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் உச்சம் அடைந்தது. இதையடுத்து, மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
ஹேமார்க்கெட்டில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்க காவல்துறையினர் மீது குண்டு வீசப்பட்டது. இதில், ஏழு காவல்துறை அதிகாரிகளும் நான்கு அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். இந்தியாவில், முதல்முறையாக மே தினம் 1923ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி அன்று மதராஸில் (தற்போது சென்னை) கொண்டாடப்பட்டது. இந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சியால் மே தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வேறு, வேறு பெயர்கள்:
இந்தியாவில், மே தினம், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. கம்கர் தின் (இந்தி), கார்மிகரா தினசரனே (கன்னடம்), கார்மிகா தினோத்ஸவம் (தெலுங்கு), கம்கர் திவாஸ் (மராத்தி), உழைப்பாளர் தினம் (தமிழ்), தொழிலாளர் தினம் (மலையாளம்), ஷ்ரோமிக் திபோஷ் (வங்கம்) என பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 நேரமாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இந்த தொழிலாளர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது.