Kerala Rain: கேரள வெள்ளத்தில் இடிந்து விழும் வீடு- பதைப்பதைக்க வைக்கும் வீடியோ !
கேரளாவில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளம் காரணமாக கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல் அங்கு இருக்கும் ஆறுகளிலும் வெள்ளம் அதிகரித்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழந்து உள்ளது. குறிப்பாக கோட்டையம், இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் வெள்ளப்பாதிப்புகள் மிகவும் தீவிரமாக உள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மழை வெள்ளத்துடன் சேர்ந்து ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் கோட்டையம் மாவடத்தில் உள்ள முண்டகாயம் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
House being washed in #Kerala. #India #KeralaFloods #KeralaRains pic.twitter.com/wJqJOnFL05
— IndiaObservers (@IndiaObservers) October 17, 2021
மேலும் தற்போது வரை வெள்ளத்தில் சிக்கி கேரளாவில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கோட்டையத்தில் 12 பேரும், இடுக்கியில் 6 பேரும் கோழிக்கோடுவில் ஒருவரும் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வந்த இரு சிறுவர்கள் உள்பட மூன்று பேரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு கேரளா அரசு பாரட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ,"எருமேலியிலிருந்து புறப்பட்டு வந்த பேருந்து புல்லாபாரா என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் இரு சிறுவர்கள் அடித்து வருவதை கண்டுள்ளனர். உடனடியாக அந்த பேருந்தின் நடத்துனர் ஜெய்சன் சுதாரித்து கொண்டு அந்த இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக பேருந்தின் ஓட்டுநர் தாம்ஸூம் வந்து காப்பாறியுள்ளார். அந்த சிறுவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய குடும்பத்தையும் இவர்கள் இருவரும் காப்பாற்றி உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
இவை தவிர கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடுக்கி அணை தன்னுடைய முழு கொள்ள அளவையும் எட்ட உள்ளதால் மேலும் அப்பகுதியில் வெள்ளம் கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: காட்டுல நீ என்ன பெரிய ஆளா? புலியை நடையால் மிரட்டிய கரடி.. வைரல் வீடியோ!