S Sreesanth: '420' வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்! கேரளாவில் நடந்தது என்ன?
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி புகார் எழுந்ததையடுத்து, சட்டப்பிரிவு 420ன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் சாரீஸ் பாலகோபாலன். இவர் கேரளாவில் உள்ள சூண்ட கண்ணபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ராஜீவ்குமார் ( வயது 50) வெங்கடேஷ் கினி ( வயது 43) ஆகியோர் இவரது நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் கர்நாடகாவில் உள்ள கொல்லூரில் விளையாட்டு பயிற்சியை மையம் கட்டலாம் என்று சாரீசிடம் கூறியுள்ளனர். மேலும், இந்த விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதில் தங்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் தொழில் கூட்டாளியாக உள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
ரூபாய் 18.7 லட்சம் பண மோசடி:
ராஜீவ்குமார், வெங்கடேஷ் கினி மட்டுமின்றி பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் தொழில் கூட்டாளிகளாக இருப்பதால், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து பல தவணைகளாக சாரீஸ் இவர்களுக்கு பணம் அளித்துள்ளனர். விளையாட்டு பயிற்சி மையம் கட்டுவதற்காக இதுவரை சாரீஸ் ரூபாய் 18.7 லட்சம் வழங்கியுள்ளார்.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகியும் விளையாட்டுப் பயிற்சி மையத்தை கட்டுவதற்கு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், சாரீஸ் பாலகோபாலன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாக, அவர்களிடம் கேட்டபோது அவர்கள் எந்த பதிலும் முறையாக அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு சாரீஸ் பாலகோபாலன் கேட்டுள்ளார். ஆனால், அவருடைய பணத்தையும் அவர்கள் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
ஸ்ரீசாந்த் மீது 420 வழக்கு:
இந்த சூழலில், சாரீஸ் பாலகோபாலன் கண்ணூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் விளையாட்டுப் பயிற்சி மையம் கட்டுவதாக கூறி தன்னிடம் ராஜீவ்குமார், வெங்கடேஷ் கினி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பணமோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் பேரில், ஸ்ரீசாந்த் உள்பட 3 பேர் மீதும் பிரிவு 420 ( பண மோசடி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். அதேசமயம் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் உள்ளார். இந்திய அணி 2007ம் ஆண்டு கைப்பற்றிய டி20 உலகக்கோப்பையிலும், 2011ம் ஆண்டு கைப்பற்றிய உலகக்கோப்பைத் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட சர்ச்சை:
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். சூதாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக அவருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்த தடை 7 ஆண்டுகளாக பின்னர் குறைக்கப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு அந்த தடை நிறைவடைந்தது. அதன்பின்பு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வயதான ஸ்ரீசாந்த் 27 டெஸ்ட் போட்டியில் ஆடி 87 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும், 44 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் 2005ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2011ம் ஆண்டும், ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியா உலகக்கோப்பையை வென்ற போட்டியில் ஆடியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக 2013ம் ஆண்டு ஆடியுள்ளார்.
மேலும் படிக்க: Ind vs Aus 1st t20: டி-20 போட்டியில் மேலும் ஒரு சாதனை செய்த இந்தியா! ஆனாலும் ரிங்கு சிங்கிற்கு ஏற்பட்ட சோகம்!
மேலும் படிக்க: IND vs AUS 1st T20: பேட்டிங்கில் அதகளம் - ஆஸ்திரேலியாவை பஞ்சாய் பறக்கவிட்ட இந்தியா..! முதல் டி-20 போட்டியில் அபார வெற்றி