Ind vs Aus 1st t20: டி-20 போட்டியில் மேலும் ஒரு சாதனை செய்த இந்தியா! ஆனாலும் ரிங்கு சிங்கிற்கு ஏற்பட்ட சோகம்!
Ind vs Aus 1st t20: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
Ind vs Aus 1st t20: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் கடைசி பந்தில், ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை தொடர்ந்து, இந்தியா தற்போது ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோகித், கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி களமிறக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
What A Game!
— BCCI (@BCCI) November 23, 2023
What A Finish!
What Drama!
1 run to win on the last ball and it's a NO BALL that seals #TeamIndia's win in the first #INDvAUS T20I! 👏 👏
Scorecard ▶️ https://t.co/T64UnGxiJU @IDFCFIRSTBank pic.twitter.com/J4hvk0bWGN
இந்திய அணி திரில் வெற்றி:
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்லிஷின் அபார சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால், 19.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர். இந்த அபார வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் என்ற இலக்கை நேற்று சேஸ் செய்தது தான், சர்வதேச டி-20 போட்டி வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்காகும். முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு ஐதராபாத்தில் மேற்கிந்திய தீவுகள் உடனான டி-20 போட்டியில், 208 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இந்திய அணியின் சிறந்த சேஸிங்காக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக, இதுவரை 5 முறை இந்திய அணி 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக துரத்தி பிடித்துள்ளது.
இலக்கு | எதிரணி | மைதானம் | வருடம் |
209 | ஆஸ்திரேலியா | விசாகப்பட்டினம் | 2023 |
208 | மேற்கிந்திய தீவுகள் | ஐதராபாத் | 2019 |
207 | இலங்கை | மொஹாலி | 2009 |
204 | நியூசிலாந்து | ஆக்லாந்து | 2020 |
202 | ஆஸ்திரேலியா | ராஜ்கோட் | 2013 |
கணக்கில் வராத சிக்சர்:
209 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்திலேயே ரிங்கு சிங் 5 ரன்களை சேர்த்தார். ஆனால், அடுத்த 3 பந்துகளில் அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 1 ரன் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால், சீன் அபாட் வீசிய அந்த பந்து நோ - பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த நோ-பாலுடன் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும், ரிங்கு சிங் விளாசிய சிக்சர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் நடுவர்கள் அறிவித்தனர். இதனால், ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் ரிங்கு சிங் உற்சாகமடைந்தார்.