கதறி அழுத 27 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை: எரிச்சலில் கொடூரமாக கொலை செய்த தாய்!
கேரளாவில் தொடர்ந்து அழுததால் பச்சிளங்குழந்தையை பெற்ற தாயே சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி ரண்ணி. அந்த பகுதியில் வசித்து வருபவர் பென்னி. நர்ஸ் படிப்பை முடித்துள்ள இவர் தற்போது ஒரு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக வீட்டிற்கே சென்று பணி செய்யும் ஹோம் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பிளெஸ்ஸி. 21 வயதே ஆன பிளெஸ்ஸிக்கும், பென்னிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு கர்ப்பமடைந்த பிளெஸ்ஸிக்கு, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி இரவு பிளெஸ்ஸியின் குழந்தை எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிளெஸ்ஸி பணியில் இருந்த தனது கணவருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக வீட்டுக்கு வந்த பென்னி குழந்தையை தூக்கிக் கொண்டு ரண்ணி தாலுகாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதைக்கேட்ட பென்னி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்ததால், குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது. மேலும், காவல்துறையினரும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையின் அறிக்கையில் குழந்தையின் தலையின் பின்புறம் பலமாக தாக்கப்பட்டதாலே குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. குழந்தை உயிரிழந்த தினத்தில், பென்னி வேலையில் இருந்ததால் குழந்தையின் தாயான ப்ளெஸ்ஸியிடம் போலீசார் விசாரைணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர்.
அப்போது, பிளெஸ்ஸி கூறியதாவது, கடந்த 8-ந் தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால், கடுமையாக எரிச்சல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி எறிந்தேன். பின்னர், துணி துவைக்கச் சென்றுவிட்டேன். துணியை துவைத்துவிட்டு வந்த பிறகு குழந்தை அசைவில்லாமல் இருந்தது. இதனால் குழந்தையின் தந்தையிடம் குழந்தை நினைவில்லாமல் இருப்பதாக கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
தனது மனைவியே தனது குழந்தையை சுவற்றில் வீசி கொன்றதை நினைத்து பென்னி மனமுடைந்தார். பின்னர், ப்ளெஸ்ஸியை போலீசார் கைது செய்தனர். அழுகிறது என்ற காரணத்தால் பெற்ற தாயே குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முதல் தெய்வம் அவனைப் பெற்றெடுத்த தாய்தான். அதனால்தான், அனைத்து மதங்களும், அனைத்து நன்னெறி நூல்களும் தாயையே முதன்மையாக அடையாளப்படுத்துகிறது. ஆனால், சமீபகாலமாக சில தாய்மார்களே இவ்வாறு கொடூரமாக நடந்து கொல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்