Crime : நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபர்..மனைவியுடன் உறவில் இருந்ததால் ஆத்திரப்பட்டு பயங்கரம்..
தன்னுடைய நண்பரின் கழுத்தை அறுத்து அவரின் ரத்தத்தை குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் மீறிய உறவால் சமூகத்தில் மட்டும் இன்றி உளவியல் ரீதியாகவும் பெரும் சிக்கல்கள் உண்டாகின்றன. இதனால், குற்றச் செயல்களும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, சமீப நாள்களாக கொடூரமான குற்றச் செயல்கள் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த நபர்:
அந்த வகையில், கர்நாடகாவில் திருமணம் மீறிய உறவால் ஒரு கொடூர குற்றச் செயல் நடந்துள்ளது. நபர் ஒருவர், தன்னுடைய நண்பரின் கழுத்தை அறுத்து அவரின் ரத்தத்தை குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் தன்னுடைய நண்பர் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக அவருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் சிக்கபல்லப்பூரில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், அதை கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் விஜய். அவரின் நண்பர் மகேஷ். விஜய்யின் மனைவியுடன் மகேஷ் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன..?
இதையடுத்து, தன்னை பார்க்க வரும்படி விஜய், மகேஷை அழைத்துள்ளார். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அதில், ஆத்திரமடைந்த விஜய், கூர்மையான ஆயுதத்தால் மகேஷின் கழுத்தை அறுத்துள்ளார். இதை அருகில் இருந்த பார்த்த நபர், தன்னுடைய போனில் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டார்.
அந்த வீடியோவில், விஜய் தனது நண்பரை கீழே தள்ளிவிட்டு, அவரது ரத்தத்தை குடிப்பது போல் தெரிகிறது. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தரையில் படுத்திருக்கும் மகேஷிடம் விஜய் கேள்வி கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது, கீழே குனிந்து, மகேஷ் தொண்டையில் இருந்து வழிந்த ரத்தத்தை விஜய் குடிப்பது போல் தெரிகிறது.
காயப்பட்டு படுத்திருக்கும் மகேஷை விஜய் குத்துவதும் அறைவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து விஜய் கைது செய்யப்பட்டார். கெஞ்சர்லஹள்ளி காவல் நிலையத்தில் விஜய் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷ், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் உள்ளிட்ட விவரங்களை தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க 60 லட்சத்து 96,310 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 7.6% குறைவு.
இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். இன்னொன்று பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம், மாநில சட்டங்கள் போன்றவை) பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.