தாலி கட்டிய உடனே நெஞ்சு வலி.. மேடையில் பிரிந்த மணமகன் உயிர்.. கல்யாண வீட்டில் எல்லோருக்கும் ஷாக்
மணப்பெண்ணுக்கு தாலி கட்டி ஒரு சில நிமிடமே ஆன நிலையில், கல்யாண மண்டபத்திலேயே மணமகன் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

தாலி கட்டிய சில வினாடிகளிலேயே மணமகன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண்ணுக்கு தாலி கட்டி ஒரு சில நிமிடமே ஆன நிலையில், கல்யாண மண்டபத்திலேயே மணமகன் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கல்யாண மேடையில் பிரிந்த மணமகன் உயிர்:
கொரோனா ஓய்ந்துவிட்டாலும் அது ஏற்படுத்திய தாக்கம் எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சமீப காலமாக, இளைஞர்கள் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் ஜமகண்டி நகரில் துயரத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
பூஜாவுக்கு தாலி கட்டிவிட்டு, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வணக்கம் வைப்பதற்காக எழுந்த பிரவீன், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கல்யாண குஷியில் இருந்த இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திடீர் திடீரென இறக்கும் இளைஞர்கள்:
மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தின் மத்தியில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு திருமணத்தின் போது, 23 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மேடையிலேயே இறந்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதம், உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் உள்ள தனது பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்காக ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது 14 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்தார்.
இளைஞர்களின் திடீர் மரணம் தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) 50 பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில், மேலும் 100 பிரேதப் பரிசோதனையை ஆய்வுக்கு உட்படுத்த ஐ.சி.எம்.ஆர் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வரிவாக பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ராஜீவ் பால், "இந்த பிரேத பரிசோதனைகளின் முடிவுகளை முந்தைய ஆண்டுகள் அல்லது கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு, இறப்புக்கான காரணங்கள் அல்லது வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகில் மனித உடலுக்குள் ஏதேனும் உடலியல் மாற்றங்கள் உள்ளதா? அதற்கும் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மற்றொரு ஆய்வில், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களின் தரவுகளை பயன்படுத்தி ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து வருகிறது" என்றார்.





















