Annamalai: ”நேரில் ஆஜராகனும், உடனே சென்னை வாங்க” அண்ணாமலைக்கு BJP ஆர்டர் - மோடி தலைமையில் ஆலோசனை
Annamalai BJP TN Election 2026: பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பாஜக தேசிய தலைமை அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளதாம்.

Annamalai BJP TN Election 2026: பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று மாலையே, அண்ணாமலை சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
அதிகார மோதலில் தமிழ்நாடு பாஜக..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசமே தொடங்கிவிட்டாலும், இதுநாள் வரை பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நிலவும் உட்கட்சி பூசல் மட்டுமின்றி, அண்ணாமலையின் அதிருப்தி மற்றும் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நாளை சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அண்ணாமலைக்கு கட்சியின் தேசிய தலைமை அழைப்பு விடுத்துள்ளதாம்.
அண்ணாமலைக்கு ஆர்டர் - பிரதமர் மோடி ஆலோசனை..
இன்று பிற்பகல் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்கும் பிரதமர் மோடி , அதனை முடித்துக்கொண்டு சென்னை வந்து சென்னை ஐடிசி நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்க உள்ளார். தொடர்ந்து நாளை காலை அவரது தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அண்ணாமலைக்கு பாஜக தேசிய தலைமை அறுவுறுத்தியுள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, நாளைய ஆலோசனைக் கூட்டத்திற்காக இன்று மாலையே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அண்ணாமலை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அண்ணாமலையின் அதிருப்திக்கான காரணம் என்ன?
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது முதலே அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனை உணர்த்தும் விதமாகவே அவர் போட்டியிட விரும்பிய கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றை கூட, அதிமுகவிடம் பேசி மாநில பாஜக வாங்கவில்லை. கோவை வடக்கு தொகுதியாவது அண்ணாமலைக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதனை விட்டுக்கொடுக்க வானதி ஸ்ரீனிவாசன் தயாராக இல்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, தேர்தலில் தான் கோவையில் பூத் ஏஜெண்டாக செயல்பட உள்ளதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், அண்ணாமலை கட்டாயமாக போட்டியிட வேண்டும் என பாஜக தேசிய தலைமை விரும்புகிறதாம். இதற்காக வெற்றி வாய்ப்பில்லாத தொகுதியில் அவரை களமிறக்கி, அண்ணாமலைக்கு தோல்வியை பரிசளிக்க தமிழக பாஜகவின் பல்வேறு கோஷ்டியினரும் தீவிரம் காட்டுகின்றனராம்.
மோடியின் முடிவு என்ன?
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறவில்லை, சரியான நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும், தனது ஆதரவாளகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என மாநில தலைமையிடம் சொன்ன கருத்துகளை, பிரதமரின் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அதுதொடர்பாக நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் எல். முருகன் ஆகியோரின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டறியப்பட வாய்ப்புள்ளது. அதன் முடிவில் ஒருவேளை அண்ணாமலையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று கட்சி தலைமை ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, நாளை பாஜகவின் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















