Cauvery Water: தமிழ்நாட்டுக்கு எல்லாம் தண்ணீர் தர முடியாது..பரபரப்பை கிளப்பிய கர்நாடக அமைச்சர்..நடக்கப்போவது என்ன?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் தமிழ்நாட்டின் கோரிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்
மோசமான பருவமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகா:
கர்நாடகாவில் மோசமான பருவமழை காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காவிரியில் இருந்து தனது பங்கு நீரை தமிழ்நாடு கேட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இதுகுறித்து விரைவில் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளதாக அம்மாநில வேளாண்துறை அமைச்சரும் மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செல்வராயசுவாமி தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டுக்கு எல்லாம் தண்ணீர் தர முடியாது"
கடந்த சனிக்கிழமை மாண்டியாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வராயசுவாமி, அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அப்போது விரிவாக பேசிய அவர், "கர்நாடகாவில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. நம் மாநிலத்திற்கே குடிநீர் தேவைக்காக தண்ணீர் தேவைப்படுகிறது. அண்மையில் நடந்த காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பயிர் தொடர்பாக விவசாயிகள் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட முடியாது" என்றார்.
இது தொடர்பாக ஆலோசனை செய்ய முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறிய அமைச்சர் செல்வராயசுவாமி, "நீர்வளத்துறை அமைச்சகத்தை கவனித்து வரும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், நீர்வளத்துறை அதிகாரிகள், இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக விவாதித்து சரியான முடிவு எடுப்பார்கள்" என்றார்.
கர்நாடகாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், "என்ன நடக்கிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். மழை பெய்யவே பெய்யாது என தெரிந்த பிறகே, மேக விதைப்பின் முலம் செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேகதாது அணை விவகாரம்:
சமீபத்தில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை தருமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. அந்த கடிதத்தில், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக காவிரியில் திறந்துவிடவில்லை. ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஏற்கனவே பிரச்னை நிலவி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் மாநில அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.