நன்கொடை பெற்று மோசடி செய்ததாக புகார்... பிரபல பத்திரிகையாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்...
சமூக நலப் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து வசூலித்த நிதி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ராணாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் பிரபல பத்திரிகையாளர் ராணா அயூப். குஜராத் கலவரம், அங்கு நடைபெற்ற போலி என்கவுன்டர், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை உள்ளிட்டவை குறித்து இவர் எழுதிய புலனாய்வு கட்டுரைகள் நாட்டையே உலுக்கியது.
இதன் விளைவாக, 2010ஆம் ஆண்டு, தற்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித் ஷா சிறை செல்ல நேரிட்டது. பல்வேறு விவகாரங்களில் பாஜக அரசுக்கு எதிராக வெளிப்படையான கருத்துகளை தெரிவித்து வரும் ராணா அயூப்புக்கு எதிராக பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம் உள்ளிட்ட சமூக நலப் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து வசூலித்த நிதி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ராணாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
முதல் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், ஏப்ரல் 2020இல் Ketto என்ற கிரவுட் ஃபண்டிங் இணையதளத்தில் ராணா பிரசாரம் மேற்கொண்டு சுமார் 2.69 கோடி ரூபாயை வசூலித்ததாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமலேயே ராணா, வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு சாரா அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
பெறப்பட்ட நன்கொடைகள் ராணாவின் தந்தை மற்றும் சகோதரியின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவரது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் நிலையான வைப்புத்தொகை கணக்கை உருவாக்கி, 50 லட்சம் ரூபாயை புதிய கணக்கிற்கு மாற்றியுள்ளார். சமூக நலப் பணிகளுக்காக 29 லட்சம் ரூபாயை மட்டுமே ராணா பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற்றதால் இது கறைபடாதவையாக சித்தரிக்க ராணா முயற்சித்ததாகவும், ஆனால், அவரது நோக்கம் நிலையான வைப்பு கணக்கை உருவாக்கி தனது சொந்த வங்கி இருப்பை அதிகரிப்பதே ஆகும் என அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
குடிசைவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதாகக் கூறி ராணா நிதி திரட்டி இருக்கிறார். அசாம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் நிவாரணப் பணிகளுக்காகவும், கொரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் ராணா நிதி திரட்டி இருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் ராணாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர் பிஎம் கேர்ஸ் நிதியிலும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலும் மொத்தம் 74.50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் ராணா மறுத்துள்ளார்.