(Source: ECI/ABP News/ABP Majha)
"பூரண மதுவிலக்குக்கு முடிவு கட்டுவேன்" காந்தி வழியில் பயணிக்கும் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!
காந்திய வழியில் பயணிக்கிறேன் என சொல்லி வரும் பிரசாந்த் கிஷோர், தான் ஆட்சி அமைத்த ஒரு மணி நேரத்தில் பூரண மதுவிலக்கை திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கட்சி தொடங்க உள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், "ஆட்சி அமைத்த 1 மணி நேரத்தில் பூரண மதுவிலக்குக்கு முடிவு கட்டுவேன்" என தெரிவித்துள்ளார்.
காந்திய வழியில் அரசியல்:
பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டவர் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். 2014 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும் 2017ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் 2019 ஆம் ஆண்டு, ஆந்திராவில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் 2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுகவுக்கும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார்.
2021 ஐந்து மாநில தேர்தலுக்கு முன்புவரை, ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வழங்கி வந்தார். ஆனால், அதன் பிறகு, தேர்தல் ஆலோசனைகள் வழங்குவதை நிறுத்த போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இணைந்தார். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது. நிதிஷ் குமாருடன் மாற்று கருத்து ஏற்பட, அதிலிருந்து விலகினார். பின்னர், ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை தொடங்கினார்.
பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு:
தனது சொந்த மாநிலமான பீகாரில் இரண்டு ஆண்டுகளாக யாத்திரை சென்றார். அவ்வப்போது தேர்தலில் கருத்துக்கணிப்புகளை வழங்கி வந்தார். மக்களவை தேர்தலில் கூட பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகளை வழங்கியிருந்தார்.
அது தவறானதையடுத்து, இனி கட்சிகளுக்கு கிடைக்கப்போகும் எண்ணிக்கை குறித்து தான் பேசப் போவதில்லை என கூறினார். இந்த சூழலில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், காந்திய வழியில் பயணிக்கிறேன் என சொல்லி வரும் பிரசாந்த் கிஷோர், தான் ஆட்சி அமைத்த ஒரு மணி நேரத்தில் பூரண மதுவிலக்கை திரும்பப் பெறப்போவதாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசிய அவர், "வரும் 2ஆம் தேதிக்கு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தயாராகி வருகிறோம். ஜான் சுராஜ் அரசு அமைந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை முடிவுக்கு கொண்டு வருவோம்" என்றார்.