Omar Abdullah: "தேர்தல் நமது உரிமை; அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்" - கொந்தளிக்கும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா..!
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருப்பதால், அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. கடந்தாண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் தேர்தல் நடத்தப்படாததால் இருப்பது பெரும் நிர்வாக சிக்கலை உருவாக்கியுள்ளது.
தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை?
இந்நிலையில், தேர்தல் நடத்தப்படாததற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா. ஜம்மு காஷ்மீரில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் எப்போது தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும். தேர்தலை நடத்தக்கூடாது என்று அவர்களுக்கு (தேர்தல் ஆணையம்) அழுத்தம் உள்ளதா? தேர்தல் கமிஷன் கொஞ்சம் தைரியம் காட்டி, தாங்கள் அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்லட்டும். ஏதோ ஒன்று சரி இல்லை.
"எங்களுக்கும் ஓரளவு சுயமரியாதையும் கண்ணியமும் இருக்கிறது"
எங்களை விட ஊடகங்கள் தேர்தல் குறித்து அதிக அக்கறை காட்டுவதாக தெரிகிறது. தேர்தல் நமது உரிமை. ஆனால், அதற்காக நாங்கள் மண்டியிடவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்க நினைத்தால், அதில் அவர்களுக்கு இன்பம் கிடைத்தால், அதைச் செய்யட்டும். எங்களுக்கும் ஓரளவு சுயமரியாதையும் கண்ணியமும் இருக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர், ஜம்மு காஷ்மீருக்கு கடந்த முறை வந்தபோது, ஜம்மு-காஷ்மீரில் வெற்றிடம் இருப்பதாகக் கூறியிருந்தார். தலைமை தேர்தல் ஆணையர், அப்படி, இங்கே ஒரு வெற்றிடத்தை கண்டால், அதை ஏன் நிரப்பவில்லை? என்ன அழுத்தம் இருக்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு சரியான நேரம் வரவில்லை என ராணுவ தளபதி தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, "கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமாகி வருவதால், ஜெனரல் தெரிவித்த கருத்துடன் உடன்படுகிறேன்.
நாங்களும் நிலைமை சாதாரணமாக இல்லை என்றுதான் சொல்கிறோம். ஜெனரலும் நிலைமை சரியில்லை என்கிறார். முன்பு தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரவாதம் தற்போது உள்ளது. மக்கள் பயந்து அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோருவதை பாருங்கள். ஜெனரல் சொல்வது சரிதான்" என்றார்.
மத்திய அரசை விமர்சித்து பேசிய அவர், "இங்கு ஜி20 மாநாட்டை நடத்துவதன் மூலம் பள்ளத்தாக்கின் நிலைமையை மூடிமறைக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆனால், உள்ளூர் மக்களுக்கு உண்மை தெரியும்" என்றார்.