J&K : இனி பல்பொருள் அங்காடிகளிலும் பீர் கிடைக்கும்.. நிர்வாக கவுன்சில் கொடுத்த ஒப்புதல்.. எங்கு தெரியுமா?
ஆனால் 10 கோடிக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் ஸ்டோர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
ஜம்மு கஷ்மீரில் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகளில் பீர் வகை மதுபானங்களை விற்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தாராளமயமாக்கப்பட்ட மதுபான உரிமம் மற்றும் விற்பனைக் கொள்கையின் கீழ் பானங்களை விற்க டிபார்ட்மென்டல் ஸ்டோர்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதால், ஜம்மு காஷ்மீரில் பீர் பிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாக கவுன்சில் கூட்டம் நகர்ப்புறங்களில் பீர் மற்றும் பிற பானங்களை விற்க டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அங்கீகரிக்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ”ஜம்மு மற்றும் காஷ்மீர் மதுபான உரிமம் மற்றும் விற்பனை விதிகள், 1984 மற்றும் கலால் கொள்கை, 2023-24 ஆகியவற்றில் தாராளமயமான விதிகளை இணைத்து, பீர் மற்றும் உடனடியாக குடிப்பதற்கு தயாராக குளிர்பானங்களை . நகர்ப்புறங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் சில்லறை விற்பனைக்கு கொண்டுவருவதற்கான JKEL-2A உரிமத்தை வழங்குவதாக நிர்வாக கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பீர்களை விற்பனை செய்யும் ஸ்டோர்கள் தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் .டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் மொத்த கார்பெட் பரப்பளவு குறைந்தபட்சம் 1200 சதுர அடி இருத்தல் அவசியம் . ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் ஆண்டு விற்றுமுதல் குறைந்தபட்சம் 5 கோடியாகவும் , கிராமபுரங்களில் குறைந்தபட்சம் 2 கோடியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.மேலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கடைகள் , அதன் கிளை கடைக்கும் தனித்தனி உரிமம் பெற விண்ணப்பிக்க தகுதியுடையது. பீரை விற்பனை செய்ய குறைந்தது 12 மாதங்களுக்கு முன்பே பல்பொருள் அங்காடி இருந்திருக்க வேண்டும். ஆனால் 10 கோடிக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் ஸ்டோர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
பல்பொருள் அங்காடிகள் மளிகைப் பொருட்கள் உட்பட குறைந்தபட்சம் ஆறு வகைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அவை உறைந்த உணவு; மிட்டாய்/பேக்கரி பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு பொருட்கள்; பாத்திரங்கள்/சமையலறைப் பொருட்கள்; விளையாட்டு பொருட்கள்; மின்/எலக்ட்ரானிக் உபகரணங்கள்; உபகரணங்கள்; மற்றும் எழுதுபொருள்களாக இருக்கலாம்.பெட்ரோல் பம்புகளில் செயல்படும் பல்பொருள் அங்காடிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம் எதுவும் பரிசீலிக்கப்படாது என அறிக்கை தெரிவிக்கிறது. ஜம்மு - கஷ்மீர் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் , வெவ்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கொண்ட இடமாக இருக்கிறது. இந்த நிலையில் எளிதில் பீர் மதுபானம் கிடைக்கப்பெறும் புதிய அறிவிப்பு சுற்றுலா துறையை மேம்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.