(Source: ECI/ABP News/ABP Majha)
காற்று மாசு பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளிய ராஜஸ்தான்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்..
இந்தியாவின் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த தரத்தை விட ஏழு மடங்கு மோசமாக உள்ளது என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த தரத்தை விட ஏழு மடங்கு மோசமாக உள்ளது என தெரியவந்துள்ளது.
5ஆம் ஆண்டு உலக காற்றுத் தர அறிக்கையின் படி, உலகின் மாசுபட்ட தலைநகரங்களில் புது தில்லி இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அது இந்தியாவில் அதிக மாசுபட்ட நகரமாக இல்லை என்று தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் ராஜஸ்தானின் பிவாடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய 60 சதவீத நகரங்களில் உலக சுகாதார அமைப்பு நிர்ணயத்த தரத்தை விட ஏழு மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
131 நாடுகளில் உள்ள 7,323 இடங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களில் இருந்து தரவுகளை சேகரித்த சுவிஸ் காற்றின் தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது தேசிய சுத்தமான காற்று திட்ட இலக்குகளை 2026 ஆம் ஆண்டுக்குள் 40 சதவிகிதம் குறைக்கும் என உறுதியளித்துள்ளது. இருப்பினும், நிலக்கரி சுரங்கங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்துவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தியாவில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது, மேலும் காற்று மாசுபாட்டைக் குறைக்க அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசை குறைக்க தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். பரவலாக்கப்பட்ட முறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்வது முன்னுரிமையாக இருக்க வேண்டும். மேலும், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அமைப்புகளிலும் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும்,” என்று கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சார மேலாளர் அவினாஷ் சஞ்சல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
2022 இல் மிகவும் மாசுபட்ட முதல் ஐந்து நாடுகளில் சாட் (chad), ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள பத்து நகரங்களில் எட்டு நகரங்களில் மத்திய மற்றும் தெற்காசியாவின் பகுதி இருப்பதாக அறிக்கையில் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒழுங்குமுறை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் இருக்கும் பலருக்கும் தாங்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் என்பது தெரியவில்லை. காற்று மாசு மானிட்டர்கள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.