கர்நாடகாவுக்கு விரைவில் புதிய முதலமைச்சர் நியமிக்கப்படலாம் என தகவல்..!
ஏற்கெனவே முதல்வராக இருந்த சதானந்த கவுடா தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், எடியூரப்பா விரைவில் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் பாஜக பெரிய வளர்ச்சி அடையாத சூழலில் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியவர் எடியூரப்பா. கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, 2011 ஆம் ஆண்டில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார்.
கர்நாடக மாநில முதல்வராக சந்தானந்த கவுடா நியமிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைமைக்கும் எடியூரப்பாவிற்கும் இந்த விவகாரத்தினால் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2012-ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி கர்நாடக ஜனதா பக்ஷா என்ற புதிய கட்சியை தொடங்கினார். 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எடியூரப்பாவின் கட்சி பாஜக போட்டியிட்ட பல்வேறு தொகுதிகளில் வாக்குகளை பிரித்ததுடன் கட்சி மொத்தமுள்ள 203 இடங்களில் 8 இடங்களை வென்று 10 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்தது.
2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக தேசிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்த எடியூரப்பா தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது கர்நாடகா ஜனதா பக்ஷா கட்சியை பாஜகவுடன் இணைத்தார். தற்போது அவரது தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரிதும் தலையிடுவதாக டெல்லி பாஜக தலைமைக்கு குற்றச்சாட்டுகள் பறந்தன. மேலும் எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இச்சூழலில் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். பாரதிய ஜனதா கட்சி கொள்கைப்படி மூத்த தலைவர்கள் அரசுப்பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வேறு பொறுப்புகளுக்கு செல்கிறார்கள். அதன்படி 79 வயதாகும் எடியூரப்பாவும் விரைவில் கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
எடியூரப்பா விலகல், புதிய முதல்வர் நியமனம் ஆகிய விஷயங்கள் திட்டமிட்டு நடைபெற வேண்டும் என்று கட்சித் தலைமை விரும்புகிறது. முதல்வர் பொறுப்பில் இருந்து எடியூரப்பா விலக தயாராக இருந்தாலும் தனது மகன்களுக்கு பாஜக கட்சியிலும் கர்நாடக அரசிலும் முக்கிய பொறுப்புகளை தர வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிகிறது. இருப்பினும் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் சோபா கரன்லெஜே மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வராக இருந்த சதானந்த கவுடா மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழப்போவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.