கொரோனா அதிகரிப்பு : நியூசிலாந்திற்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, இந்தியர்கள் வரும் 28-ந் தேதி வரை நியூசிலாந்திற்குள் நுழைய அந்த நாட்டு பிரதமர் தடை விதித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு, அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்டுவோர் எண்ணிக்கை தினசரி 1 லட்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.26 லட்சம் அதிகரித்துள்ளது.
மேலும், மகாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரி்தது வருவது, உலக நாடுகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அடெர்ன் அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து நியூசிலாந்திற்குள் நுழைய வரும் 11-ந் தேதி முதல் வரும் 28-ந் தேதி வரை அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இந்தியாவில் தற்போது தங்கியுள்ள நியூசிலாந்து நாட்டினரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப 11-ந் தேதி முதல் வரும் 28-ந் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு, அந்த நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.