National Icon: நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களை கவர சூப்பர் திட்டம்.. தேர்தல் ஆணையத்துடன் கைக்கோர்க்கும் சச்சின்..!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவும், வாக்களிக்கவும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்தல் ஆணையம் இணைக்க உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கரை மாற்றுவதற்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் சச்சின் முகம்..?
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவர். இந்திய தேர்தல் ஆணையம், சச்சின் டெண்டுல்கரை தனது தேசிய அடையாளமாக மாற்றினால், நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் ரங் பவனில் சச்சின் டெண்டுல்கர் தேர்தல் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இந்த ஒப்பந்தமானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஒப்பந்ததின் மூலம், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் மற்றும் தேர்தல் செயல்முறை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இவை செயல்படுத்தப்பட இருக்கிறது.
தேர்தல் ஆணையம் - சச்சின் டெண்டுல்கர்:
பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர், 2012ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும், 2013ல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். முன்னதாக, 2012 முதல் 2018 வரை ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக இருந்தார். அதில், சராசரியான 79%க்கு பதிலாக 8% மட்டுமே வருகை புரிந்ததால் இவரது செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் ஆணையம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு, ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களைத் தேசிய அடையாளங்களாகக் குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்துள்ளது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்எஸ் தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக (நேஷனல் ஐகான்) இருந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு தனது சர்வதேச வாழ்க்கையை தொடங்கி, 2013 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதன்மூலம், இவர் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடினார். மேலும், சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 உலகக் கோப்பை வரை 6 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடி பெருமை சேர்த்துள்ளார்.
இது தவிர சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. மேலும், சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2008 முதல் 2013 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் எக்கசக்க சாதனைகள் குவிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.