ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஜெகதீப் தன்கரின் பெயர் எழுத்து பிழையுடன் இருப்பதாக கூறி மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அதை தள்ளுபடி செய்துள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக மாநிலங்களவை தலைவர் தன்கர் மீது இந்தியா கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், தீர்மானத்தில் அவரது பெயரில் எழுத்து பிழை இருப்பதாக கூறி அது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக, மேற்குவங்கத்தை ஆளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லி, பஞ்சாபை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா?
இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஜெகதீப் தன்கரின் பெயர் எழுத்து பிழையுடன் இருப்பதாக கூறி மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், அதை தள்ளுபடி செய்துள்ளார். அதோடு, அதற்கான நோட்டீஸை 14 நாள்களுக்கு முன்பு சமர்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகிக்கும் நபருக்கு எதிராக பொய்யான பிம்பத்தை உருவாக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. துணை ஜனாதிபதிக்கு எதிராக பொய்யான பிம்பத்தை உருவாக்குவதற்காக கூட்டாக செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது.
அத்தகைய தீர்மானத்தை கொண்டு வருவதற்கு 14 நாள்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும். இது பின்பற்றவில்லை. தீர்மானத்தில் பெயரும் சரியாக எழுதப்படவில்லை" என்றார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் டிஸ்மிஸ்:
மாநிலங்களவை தலைவரை நீக்க வேண்டுமானால் அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமானது, மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு, வாக்கெடுப்புக்கு விடும்போது மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களில் 50 சதவிகிதத்தினர் + ஒரு எம்.பி. ஆதரவு அளிக்க வேண்டும். இதுவே, மக்களவையிலும் பொருந்தும்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான எண்ணிக்கை மாநிலங்களவையிலும் சரி மக்களவையிலும் சரி இந்தியா கூட்டணிக்கு இல்லை. இருப்பினும், எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!