உக்ரைனுக்கு செல்வதை தவிர்க்கவும்...இந்திய மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உள்ளூர் அலுவலர்களால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைனுக்கும், உக்ரைனில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு இடத்திற்கும் தேவையற்று மேற்கொள்ளப்படும் அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியா அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூர் அலுவலர்களால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
#Indian nationals have been advised to avoid all non-essential travel to and within #Ukraine.
— All India Radio News (@airnewsalerts) October 10, 2022
The advisory has been issued by the Indian Embassy in Ukraine (@IndiainUkraine) in view of the current escalation of hostilities in that country. pic.twitter.com/BsTqYzoQZo
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷியா இன்று குண்டு மழை பொழிந்தது. இதில் சிக்கி 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் உக்ரனை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிவ் நகரத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், "உக்ரைனில் தற்போது அதிகரித்து வரும் மோதல் போக்கைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பிரஜைகள் உக்ரைனுக்கும் உள்ளேயும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உக்ரேனிய அரசாங்கம் மற்றும் உள்ளூர் அலுவலர்களால் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே உக்ரைனில் உள்ள நகரங்களில் குண்டு மழை பொழியப்படுவதாக கருதப்படுகிறது.
உக்ரைன் மீது குறைந்தபட்சம் 75 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பாக, தலைநகர் கீவ் மற்றும் தெற்கு மற்றும் மேற்க நகரங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப வாரங்களில் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்ட பிறகு, தலைநகரின் மீதான மிகத் தீவிரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஷியா தாக்குதல் குறித்து விரிவாக பேசியுள்ள அவர், "இன்று காலை கடினமானதுதான். நாங்கள் தீவிரவாதிகளை சமாளித்து வருகிறோம். டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ட்ரோன்களை எதிர்கொண்டு வருகிறோம்.
அவர்களுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. முதலாவது, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி வசதிகள். இரண்டாவது மக்கள். மக்களிடையே மிகப்பெரிய அளவில் உயிர் இழப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நேரம் பார்த்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன" என்றார்.
தாக்குதலை விவரித்துள்ள எல்விவ் மேயர் ஆன்ட்ரி சடோவி, "எரிசக்தி வசதிகள் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து குண்டுவீசப்பட்டுள்ள நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள எல்விவ் நகரில் மின்சாரம் தடைபட்டுள்ளது. சூடான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
தாக்குதல் காரணமாக கிவ் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சாலை சந்திப்பில் மிக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கார்கள் அழிக்கப்பட்டன. கட்டிடங்கள் சேதமடைந்தன. அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.