Telengana ATM Theft: ஏ.டி.எம்மில் கொள்ளை: போலீசாரை கண்டதும் பணத்தை சாலையில் வீசி சென்ற திருடர்கள்..!
தெலங்கானா மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் 4 பேர் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயற்சித்த போது, கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசி சென்றனர்.
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் கொருட்லாவில் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை ஏடிஎம் மையத்தின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 19 லட்சம் பணத்தை பைகளில் நிரப்பி எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் அடித்துள்ளது.
மேலும் ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். பணத்துடன் கொள்ளையர்கள் நான்கு பேர் வெளியில் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
கொள்ளையர்களை பார்த்தவுடன் போலீசார் அவர்களது காரை தப்பிச் செல்லும் நான்கு பேரின் கார் மீது மோதியுள்ளனர். ஆனாலும் அவர்கள் நிறுத்தாமல் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் திருடர்கள் பணப்பையை சாலை வீசி சென்றனர். பையிலிருந்த பணம் சாலையில் கொட்டியது.
மொத்தம் ரூ.19 லட்சம் மீட்கப்பட்டதாக ஜக்தியால் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆர் பிரகாஷ் தெரிவித்தார். திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஏ.டி.எம் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின் சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இதுதொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, ஆய்வாளர் லெனின் பாரதி, உதவி காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.
ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ஹைதராபாத் மறுவாழ்வு மையம்! : என்ன நடந்தது?