ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ஹைதராபாத் மறுவாழ்வு மையம்! : என்ன நடந்தது?
விஜய் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட, மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் ரூ.67,345 கட்டணமாக செலுத்தியுள்ளனர்
செகந்திராபாத்தில் உள்ள செரினிட்டி அறக்கட்டளை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக தெலுங்கானா மாநில நுகர்வோர் பிரச்சினைகள் தீர்ப்பாயத்தால் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டரீதியாக 20,000 செலுத்தக் கோரியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செகந்திராபாத்தில் உள்ள ஒரு மறுவாழ்வு மையம் செரினிட்டி ஃபவுண்டேஷன். பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கச்சேகுடாவில் வசிக்கும் ஆர்.விஜய் குமார் என்பவரால் இந்த அறக்கட்டளை மீது புகார் அளிக்கப்பட்டது. அதில் நெறிமுறையற்ற, சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
விஜய் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட, அதிலிருந்து அவரை மீட்பதற்காக அவரை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துள்ளனர். மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினர் ரூ.67,345 கட்டணமாக செலுத்தியுள்ளனர்.இருப்பினும், மறுவாழ்வு மையத்தில் விஜய் குமார் மோசமாக நடத்தப்பட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.மேலும், புனர்வாழ்வு மையத்தில் நோயாளிகள் நிரம்பி வழிவதாகவும், பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களுக்கு உரிய வசதிகள் இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 24 மணி நேர மனநல மருத்துவர் தேவை இதுபோன்ற மையங்களில் அவசியம் என்றும் ஆனால் அதுபோன்ற மருத்துவரும் இல்லை ஆலோசனையும் தேவைப்படும் நேரத்துக்கு கிடைப்பதில்லை. அதனால் இந்த மையம் விதிமுறைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே விஜய்குமாருக்கு வலது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அதற்கான சரியான மருத்துவத்தை அவர்கள் தரவில்லை என்றும் விஜயின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மையம் நெல்லூரைச் சேர்ந்த ஒரு பொது மருத்துவரால் நடத்தப்படுகிறது, அவர் ஹைதராபாத் மையத்தை பார்வையிடுவதே இல்லை, மேலும் அவர்கள் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக்கொள்வதற்கு ஒரே ஒரு உதவியாளரை மட்டுமே நியமித்துள்ளனர் என்று புகார்தாரர் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த ஆயம், ”மறுவாழ்வு மையம் நோயாளிகளுக்கு முழுநேர கவனம் மற்றும் கவனிப்புடன் சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து மீள நிபுணர்களின் முழு நேர ஆலோசனைகள் தேவை, ஆனால் முறையான வசதிகள் மற்றும் தகுதியான மனநல மருத்துவர் இல்லாமல் ஒரு மறுவாழ்வு மையத்தை நடத்துவதன் மூலம் செரினிட்டி அறக்கட்டளை குறைபாடுள்ள சேவைகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளது” எனக் கூறியுள்ளது
எனவே, மறுவாழ்வு மையம் இதை அடுத்து விஜய்க்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், சட்டப்படியான 20,000 ரூபாய் அபராதமும் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் அந்த ஆயம் உத்தரவிட்டுள்ளது.