11 AM Headlines: எதிர்பார்ப்புகளை தூண்டும் தவெக மாநாடு, இந்தியாவிற்கு 309 ரன்கள் இலக்கு - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தத்தளிக்கும் மதுரை:
நேற்று பிற்பகல் முதல் மாலை வரை மதுரையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக செல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள, தாழ்வான பகுதிகளில் இடுப்பு அளவிற்கு மழை நீர் தேங்கியது. ஏரளமான வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு.
தவெக மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்:
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடலின் பின்புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணியளவில் தொடங்கும் மாநாட்டில், விஜய் 100 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து விட்டு 2 மணி நேரம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு - பாஜக எம்.பி.க்கு தொடர்பு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக்கட்டிகளை புதுச்சேரி பாஜக எம்.பி. செல்வகணபதி விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலம். ஹவாலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் நேற்று நடந்த விசாராணையில், சூரஜுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரூ.1 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டதாக தகவல்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, 58 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 65 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.107ல் தொடர்கிறது.
ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் கொட்டித்தீர்த்த கனமழை
டாணா புயல் கரையைக் கடந்து 24 மணி நேரத்திற்குப் பிறகும், ஒடிசா, மேற்குவங்கத்தில் கொட்டித்தீர்த்த கனமழை. இதன் தாக்கம் மேற்குவங்கத்தில் அதிகமாக தென்பட்டது. புயல் பாதிப்பினால் மேற்குவங்கத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல். சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு. கொல்கத்தாவின் எஸ்பிளானேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி
நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த சலுகை நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 50 பேர் பலி
கரீபியன் தீவு நாடான ஹைதியில் அர்காஹே நகர கடற்பகுதியில் ஆயுத கும்பல் ஒன்று, அருகில் உள்ள நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிமருந்துகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இருந்து தப்பிக்க வேகமாக சென்றபோது அங்குள்ள ஒரு பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணிக்கு 309 ரன்கள் இலக்கு
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 103 ரன்கள் முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இன்று 255 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (WK), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), அஷ்வின், ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.