Chennai IIT: நிலத்துக்கடியில் பெட்ரோலியம் இருப்பதை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.. சென்னை ஐஐடி அசத்தல்
நிலத்தடியில் பெட்ரோலியத்தைக் கண்டறிவதற்கு பயனுள்ள தரவுப் பகுப்பாய்வு அணுகுமுறையை, ஐஐடி மெட்ராஸை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
புதிய தொழில்நுட்பம்:
மெட்ராஸ் ஐஐடி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி பாறை அமைப்பை வகைப்படுத்தி பெட்ரோலியம்- ஹைட்ரோகார்பன் கையிருப்பு வளத்தைக் கண்டறியக் கூடிய புள்ளிவிவர அணுகுமுறையை உருவாக்கி உள்ளனர். மேல் அசாம் படுகையில் திப்பம் மணற்கல் அமைந்துள்ள பகுதியில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிக முக்கிய தகவல்களை வழங்குவதில் இந்த முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.
நில அதிர்வு குறித்த ஆய்வுகள், வடக்கு அசாம் பிராந்தியத்தில் பெட்ரோலிய கையிருப்பைக் கண்டறிய ஆழ்துளைக் கிணறுகளில் எடுக்கப்படும் தரவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர். அப்போது, 2.3 கி.மீ. ஆழத்தில் உள்ள பாறை வகை பரவல் மற்றும் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிகத்துல்லியமான தகவல்கள் கிடைத்தன. நிலத்தடியில் உள்ள பாறைகளை வகைப்படுத்துவது என்பது சவாலான பணி. நில அதிர்வு ஆய்வுமுறைகள், ஆழ்துளைக் கிணறுகளின் பதிவுத் தரவுகள், பூமியின் அடியில் உள்ள கட்டமைப்பைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆய்வில் கிடைக்கும் கூடுதல் தரவுகள்:
நில அதிர்வு ஆய்வின்போது, ஒலி அதிர்வுகள் தரைவழியாகவே அனுப்பப்படுகின்றன. அவை பாறை அடுக்குகளைத் தாக்கும்போது, வெவ்வேறு சிறப்பு இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதிபலிக்கும் அலைகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மூலம் நிலத்தடிப் பாறை அமைப்பு படம்பிடிக்கப்படுகிறது. எண்ணெய்க் கிணற்றுக்காக தோண்டும்போது காணப்படும் பூமியின் பல்வேறு அடுக்குகள் தொடர்பான விவரங்களை இந்த முறையில் அறியலாம்.
ஐஐடி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறையின் (Ocean Engineering) பெட்ரோலியப் பொறியியல் திட்ட ஆசிரியரான பேராசிரியர் ராஜேஷ் ஆர்.நாயர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகள் மதிப்புமிக்க நேச்சர் (Nature) இதழில் பிரசுரமாகி உள்ளன. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களான எம்.நாகேந்திரபாபு, டாக்டர் வெங்கடேஷ் அம்பதி ஆகியோர், பேராசிரியர் ராஜேஷ் ஆர்.நாயருடன் இணைந்து இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ளனர்.
பெட்ரோலியத்தை கண்டறிய ஆய்வு:
100 ஆண்டுகளுக்கு முன், மேல் அசாமில் டிக்போய் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, அசாம்-அரக்கன் படுகைப் பகுதி கணிசமான அளவுக்கு ஹைட்ரோகார்பன் இருப்பு இருப்பதைக் குறிப்பிடும் விதமாக ‘பிரிவு-1’ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் செறிந்த பாறை அமைப்புகளில் துளையிடக்கூடிய இடங்களில் பெட்ரோலியம் காணப்படுகிறது. அசாமின் எண்ணெய்வளம் மிகுந்த படுகைகளில் பெட்ரோலியம் எங்கு கிடைக்கும் என்பதை அறிய, அங்குள்ள பாறை அமைப்பு பற்றி ஆய்வு செய்வதுடன், அவற்றில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டக்கூடிய பகுதிகளையும் கண்டறிய வேண்டி உள்ளது.
இந்த ஆய்வின் அவசியம் குறித்து ஐஐடி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறையின் பெட்ரோலியப் பொறியியல் திட்டப் பேராசிரியரான ராஜேஷ் ஆர்.நாயர் பேசும்போது, “நில அதிர்வுப் படங்களில் தெளிவுத் திறன் குறைவாக இருப்பதால் நிலத்தடி கட்டமைப்புகளைப் படம்பிடிப்பது சவாலாக இருந்து வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளின் தரவுகள், நிலஅதிர்வு அளவீடுகள் போன்றவற்றைத் தொடர்புபடுத்தும் பணியும் சிரமம் மிகுந்ததாகும். சிக்கலான ஆழ்துளைக் கிணறுப் பதிவுகள், நில அதிர்வு தரவுகள் போன்றவற்றில் இருந்து ஹைட்ரோகார்பன் மண்டலங்களைக் கணிக்கும் முறையை எங்களது குழுவினர் உருவாக்கி உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, நில அதிர்வு தரவுகள், ஆழ்துளைக் கிணறுகளின் பதிவுகளில் இருந்து பெறப்பட்ட பெட்ரோபிசிக்கல் தரவுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள புள்ளிவிவரத் தொடர்புகளை நிலைநாட்டும் தரவுப் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி, எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள பாறைகளின் மேற்பரப்பு கட்டமைப்புகளின் குணாதிசயங்களைக் கண்டறிய முடியும் என பேராசிரியர் ராஜேஷ் நாயர் கூறினார்.
இப்பணிகளை மேற்கொண்டபோது, ‘பாய்சன் மின்மறுப்பு’ (Poisson impendence - PI) என்ற குறிப்பிடத்தக்க அம்சங்களையும் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர். மணற்கல் நீர்த்தேக்கத்தில் உள்ள திரவ உள்ளடக்கத்தை அடையாளம் காண்பதற்காக பாய்சன் மின்மறுப்பு பயன்படுத்தப்பட்டது. வழக்கமான பண்புகளைவிட ஹைட்ரோகார்பன் செறிவுள்ள பகுதிகளை மதிப்பிடுவதில் ‘பாய்சன் மின்மறுப்பு (PI) மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
26 தொகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான இந்தியாவின் மிகப்பெரிய கடலோர ஏல நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் மிகப்பெரிய ஊக்கம் பெறும். எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிலைப் பொறுத்தவரை தோராயமான அளவுக்கு உதாரணமாகக் கூற வேண்டுமெனில், புதிய தொழில்நுட்பத்தில் 0.07 சதவீத அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்போது வணிகத்தில் 10 சதவீத அளவுக்கு ஊக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என, பேராசிரியர் ராஜேஷ் நாயர் கூறினார்.