Haj 2024: 2024 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலயா? கால அவகாசம் நீட்டிப்பு - எவ்வளவு நாள் தெரியுமா?
ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு நீட்டித்துள்ளது.
Haj 2024: ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் மதக்கடமைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு ஆண்டுதோறும் பல நாடுகளைச் சேர்ந்த புனிதப்பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய புனித விழாக்களில் ஒன்றாக திகழும் இந்த விழாவில், ஏராளமான இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 2024ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து ஆன்லையின் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு டிசம்பர் 20ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்தது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் விண்ணப்பிப்பதற்கு நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு நீட்டித்துள்ளது.
2024 ஹஜ் பயணம்:
விண்ணப்பதாரர்கள் ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது, www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். Haj Savidha என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். ஹஜ் 2024ஆம் ஆண்டு விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். முகவரி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2025 ஜனவரி 1 வரையில் செல்லக்கூடிய பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டை போல தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின்பேரில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024ஆம் ஆண்டிற்கான இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் https://www.hajcommittee.gov.in/ வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தேசத்துரோக சட்டம் ரத்து! கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை - புதிய குற்றவியல் மசோதாக்கள் சொல்வது என்ன?