Exclusive: Gujarat ABP C-Voter Opinion Polls: மோர்பி பால விபத்து: பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்குமா? என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?
குஜராத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்பது குறித்து ஏபிபி நியூஸ்-சிவோட்டர் இணைந்து குஜராத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை ஏபிபி-சி வோட்டர் இணைந்து நடத்தியுள்ளது.
ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பு: குஜராத் தேர்தல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
இதனிடையே குஜராத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மோர்பி பாலம் இடிந்து விழுந்த கோர விபத்தில் 136 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வரவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இச்சம்பவம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், பாஜக தனது மேற்குக் கோட்டையான குஜராத்தை எளிதில் கைப்பற்றும் என்றும் ஏபிபி-சிவோட்டர் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
புதுப்பொலிவுடன் களமிறங்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை பாஜக தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது, ஆனால் இந்த முறை பாஜக, ஆம் ஆத்மி கட்சியையும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் புதுப்பொலிவுடன் களமிறங்கும் காங்கிரஸையும் எதிர்த்து களமிறங்க உள்ளது.
இந்நிலையில், ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் பதிவாகி உள்ளவை பின்வருமாறு:
- குஜராத் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு வாங்கியில் ஆம் ஆத்மி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை தங்கள் வாக்குகளாக மாற்றும் என 47 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
- ஆம் ஆத்மி தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் “டெல்லி கல்வி மாடல்", இலவசங்கள் என பல வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியால் பாஜக வாக்கு வங்கி சரியும் என சுமார் 37 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- குஜராத்தில் ஏழாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சுமார் 56 விழுக்காடு நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஆம் ஆத்மி கட்சி பூபேந்திர படேல் தலைமையிலான அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சுமார் 20 விழுக்காடு நபர்கள் கருதுகின்றனர். 17 விழுக்காட்டினர் மட்டுமே காங்கிரஸுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
- குஜராத்தின் மீண்டும் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என 33 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
- ஆம் ஆத்மி கட்சி தன் முதலமைச்சர் வேட்பாளராக இசுதன் காத்வியை அறிவிக்கும் முன் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட நிலையில், 21 விழுக்காட்டினர் அக்கட்சியின் வேட்பாளரையே அடுத்த முதலமைச்சராக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
- முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மூன்றாவது விருப்பமான தேர்வாக உள்ளார்.
- குஜராத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளின் அடிப்படையில், 44 விழுக்காட்டினர் ’நல்லது’ என்று மதிப்பிட்டுள்ளனர்.
- 39 விழுக்காட்டினர் முதலமைச்சர் பூபேந்திர படேலின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- 65 விழுக்காட்டினர் இந்தியப் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்தாண்டு நடைபெறும் தேர்தலிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி சி வோட்டர்ஸ் கணித்துள்ளது. அதாவது பாஜக இந்தாண்டு சட்டபேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
[பொறுப்புத்துறப்பு: தற்போதைய கருத்துக் கணிப்பு/சர்வே சிவோட்டரால் நடத்தப்பட்டது. நிலையான RDD இலிருந்து பெறப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் இந்தத் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இது ±3 முதல் ±5% வரை பிழையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து அளவுகோல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடியே முடிவுகள் இருக்க வேண்டியது அவசியமில்லை.]