70 வயதில் குஜராத் பாட்டிக்கு ‛குவா குவா...’ லாலோவுக்கு லாலா பாட தயாரான 75 வயது தந்தை!
10 மாதங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட அவருக்கு, இறுதியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிகள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். குழந்தைக்கு ‛லாலோ’ என பெயரிடப்பட்டுள்ளது.
முதுமையில் மனிதன் குழந்தையாகிறான் என்பதுண்டு. ஆனால் குழந்தை பெற்றவன் ஆவானா என்றால் அது ஆயிரம் மில்லியன் கேள்வி தான். ஆனால் அதுவும் நடக்கும், காரணம் இது கலியை கடந்த காலம் என்பதால்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்தவர் வால்ஜிபாய் ரபாரி. 75 வயதான இவருக்கு 70 வயதில் ஜிவுன்பென் ராபரி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 45 ஆண்டுகுள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு குழந்தை பேறு இல்லை. இன்று வரும் நாளை வரும் என காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே அடைந்தனர். இளமை கடந்து முதுமை வந்தும் குழந்தை வந்தபாடில்லை. இந்நிலையில் தான் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறலாம் என்கிற யோசனையை சிலர் வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பூஜ் பகுதியில் உள்ள பிரபல செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள், தங்களின் விருப்பத்தை கூறியுள்ளனர்.
அதிர்ந்து போன டாக்டர்கள், இந்த வயதில் குழந்தை பெறுவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர். ஆனாலும் தம்பதிகள், குழந்தை பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அதுமட்டுமின்றி, ‛என் வாழ்க்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது... இறப்பதற்கு முன் ஒரு குழந்தைக்கு தாயாக விரும்புகிறேன்... உதவுங்கள்...’ என உருக்கமாக பேசியுள்ளார் ஜிவுன்பென் ராபரி. பாட்டியின் மன தைரியத்தை கண்டு அசந்து போன டாக்டர்கள், அதையே சவாலாக எடுத்துக் கொண்டு அவருக்கு குழந்தை பிறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
வயது மூப்பு காரணமாக சுருங்கியருந்த கருப்பையை விரிவுபடுத்தும் முயற்சிகள் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இப்படி அடிப்படை கட்டமைப்புக்கு மட்டும் சில மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் செயற்கை முறையில் கருவூட்டல் நடந்தது. ஆச்சரியம் என்னவென்றால், முதல் முயற்சியிலேயே கருவுற்றார் ஜிவுன்பென் ராபரி. 10 மாதங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட அவருக்கு, இறுதியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதிகள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
குழந்தைக்கு ‛லாலோ’ என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர்களே இந்த முயற்சி வெற்றி பெற்றதை கண்டு அதிர்ச்சி தான் அடைந்தனர். ஆனாலும் அது சாத்தியமே என்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர். 70 வயதில் மூதாட்டி தாயானதும், 75 வயதான முதியவர் தந்தையானதும் குஜராத்தில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்