கை கொடுத்த கை: காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது குஜராத் பெண்ணின் கரங்கள்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்தது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகள் தான்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்தது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகள் தான். ஆனால், இந்தக் கதை வித்தியாசமானது. இங்கே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு குஜராத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆம் கைகள் மாற்று அறுவை சிகிச்சை தான்!
ஆம் கைகள் மாற்று அறுவை சிகிச்சை தான் நடந்துள்ளது. முதன்முதலாக கை தானம் செய்யப்பட்டதும் அகமதாபாத்தில் தான். 2021ல் முதல் முறையாக அகமதாபாத்தில் இருந்து கை தானம் பெறப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து 4 கைகள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னை, மும்பையில் உள்ள நபர்களுக்கு அந்தக் கைகள் பொருத்தப்பட்டன. இப்போது குஜராத்தை சேர்ந்த பெண்ணின் கரங்கள் காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
விபத்தில் பறிபோன கைகள்:
தமிழகத்தின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 24. இவர் 2018ல் அவரது ஒர்க்ஷாப்பில் வேலை செய்யும்போது ஷாக் அடித்து அதில் கரங்களை இழந்தார். அதன்பிறகு அவர் உயிர்பிழைப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. 4 ஆண்டுகள் நிலையில் இப்போது அவருக்கு கைகள் கிடைத்துள்ளன. அதற்காக அவர், மேஎகா கோப்ரகடே என்ற 26 வயது இளம் பெண்ணுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆம் மூளைச் சாவு அடைந்த அந்தப் பெண்ணின் கரங்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இருந்து வெங்கடேசனுக்காக கொண்டு வரப்பட்டது. கரங்களை அகற்றுவது, பொருத்துவது இரண்டுமே மிகவும் சவாலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனக் கூறப்படுகிறது.
வெங்கய்யா நாயுடு பாராட்டு:
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சையை க்ளென் ஈகில்ஸ் குளோபல் ஹெல்த் மருத்துவமனையில் மூத்த மருத்துவர் செல்வ சீதாராமன் செய்திருக்கிறார். அவர் பிளாஸ்டிக் மற்றும் ரீகன்ஸ்ட்ரக்டிவ் அறுவை சிகிச்சை துறையின் தலைவராகவும் இருக்கிறார்.
வெங்கடேசனுக்கு மறு வாழ்வு:
இந்த கைகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெங்கடேசனுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இதனால் தனக்கு எதிர்காலம் கிடைத்துவிட்டதாக கூறுகிறார் வெங்கடேசன். ஆனால் வெங்கடேசன் இன்னும் சில மாதங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர் தொடர்ச்சியாக பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் கைகளை இயல்பாக அசைத்து, பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது இன்னும் சில மாதங்களுக்கு இம்யூனோசப்ரஸன்ட்ஸ் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவருக்கு மாற்று கைகளில் தொற்று ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.