"ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்" திமுகவை பின்பற்றி ஒரே போடு போட்ட காங்கிரஸ்!
ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளம், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப், மேற்குவங்கம் என இந்த மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஆளுநர் பதவி வேண்டுமா? வேண்டாமா? திமுகவின் நிறுவனரான அண்ணா காலத்தில் இருந்தே, ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில், திமுகவை பின்பற்றி அதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் விடுத்துள்ளது.
ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான அபிஷேக் மனு சிங்வி, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன? இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக ஆளுநர்கள் செயல்படும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை நியமிக்க வேண்டும்.
கோபாலகிருஷ்ண காந்தி போன்றவர் இப்படி செய்வாரா? குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எங்கள் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அவர் பெயரை குறிப்பிடுகிறேன். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.
முதலமைச்சருக்கு கவர்னர் சவாலாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ மாறினால், கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும். ஏனெனில், தேர்தல் நடத்தப்படுவது கவர்னருக்காக அல்ல. இன்று என்ன நடக்கிறது என்றால், நான் 8-10 முறை மசோதாவை நிறைவேற்ற மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார்.
இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என ஆளுநர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கடுப்பில் இரண்டாவது வாளாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்றார்.