புதுச்சேரியில் 240 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை - இந்து முன்னணி அறிவிப்பு...!
’’பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கிய துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசைக்கு இந்து முன்னணி நன்றி’’
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுவையில் 240 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்வது, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக விநாயகர் சதுத்தியை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விழாவை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. காலாப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 240 விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 14ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து சிலைகள் தயாரிக்கும் பணி மணவெளி, அரியூர், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான சிலைகள் முதல் 10 அடிக்கு மேல் உயரம் கொண்ட பெரிய சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது. இதற்கிடையே இந்து முன்னணியின் மாநில தலைவர் சனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடங்கிய காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விழா எளிமையான முறையில நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளதால் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் கவர்னர், முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி வழங்கிய கவர்னருக்கு இந்து முன்னணி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.