Plane Hijacked Fake : அய்யய்யோ விமானத்தை ஹைஜாக் பண்ணிட்டாங்க... தாமதத்தால் ஆத்திரம்.. பொய் தகவல் பரப்பி சிக்கிய பயணி..
விமானத்தை தாமதமாக இயக்கியதால் பயணி கடுப்பாகி பொய்யான தகவலை பரப்பி வசமாக சிக்கியுள்ளார்.

சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விமானத்தை தாமதமாக இயக்கியதால் பயணி கடுப்பாகி பொய்யான தகவலை பரப்பி வசமாக சிக்கியுள்ளார். தாமதமாக இயக்கப்பட்டதால் கடுப்பான பயணி ஒருவர், விமான கடத்தப்பட்டதாக பொய் தகவலை பரப்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் பகுதியைச் சேர்ந்தவர் மோதி சிங் ரத்தோர். இவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். மோசமான வானிலை காரணமாக அவர் செல்லவிருந்த துபாய் - ஜெய்பூர் விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
காலை 9:45 மணிக்கு டெல்லியில் தரையிறங்கிய விமானம் மதியம் 1:40 மணிக்கு ராஜஸ்தான் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, விமானம் தாமதமாக இயக்கப்பட்டதால் கடுப்பான மோதி சிங், தான் சென்ற விமானம் கடத்தப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்ப, விமானத்தில் இருந்து மோதி இறக்கிவிடப்பட்டுள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது பையை சோதனை செய்தனர். பின்னர், சேர வேண்டிய இடத்திற்கு புறப்பட்டு செல்ல விமானம் அனுமதிக்கப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உள்ளூர் காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோதி கைது செய்யப்பட்டார். சமீப காலமாக, விமானத்தில் தொடர் விதி மீறல் அறங்கேறி வரும் நிலையில், இச்சம்பவம் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பட காத்திருக்கும் பகுதியின் மூன்றாவது நுழைவாயிலில் குடிபோதையில் இருந்த 39 வயது நபர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், விமானப் பணிப் பெண்ணிடம் வெளிநாட்டு பயணி அத்துமீறிய இரண்டு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, நவம்பர் மாதம், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம், பாரிஸிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் இருக்கையில் சிறுநீர் கழித்தது, கழிவறைக்குள் புகை பிடித்தது உள்ளிட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தங்களிடம் புகார் தெரிவிக்கத் தவறியதற்காக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
ஐந்து நாட்களில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட இரண்டாவது அபராதம் இதுவாகும்.





















