கிணற்றில் விழுந்த பூனை; காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் - என்ன நடந்தது?
மகாராஷ்ட்ராவில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றச் சென்ற 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துளளது அகமத்நகர் மாவட்டம். இங்கு வத்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணறு ஒன்று உள்ளது. நீண்ட காலமாக மக்கள் யாரும் அந்த கிணற்றை பயன்படுத்தாமல் அது பாழடைந்த கிணறாக மாறிவிட்டது.
கிணற்றில் விழுந்த பூனை:
அந்த கிணற்றில் பல்வேறு கழிவுகளை மக்கள் கொட்டி அது ஒரு குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. இந்த நிலையில், நேற்று அந்த கிணற்றின் உள்ளே பூனை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதைப்பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் சிலர் அந்த பூனையை மீட்க முடிவு செய்துள்ளனர். சந்தீப் மாணிக் காலே ( 36), பப்லு அனில் காலே (28) அனில் பாபுராவ் காலே ( 53) பாபாசாகேப் கெய்க்வாட் ( 36) விஜய் மாணிக் காலே (35) ஆகியோர் பூனையை மீட்க முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் மாணிக் கோவிந்த் காலே ( 65) என்ற முதியவரும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார்.
முதலில் இவர்களில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இறங்கி பூனையை மீட்டுள்ளார். ஆனால், அவர் மேலே வரும்போது தவறி கிணற்றின் உள்ளே விழுந்தார். அந்த கிணறு நீண்ட காலமாக பல்வேறு கழிவுகள் கொட்டியும், விலங்குகள் கழிவும் கொட்டி மிக மிக அசுத்தமாக இருந்ததால் அந்த கிணற்றில் விஷவாயு இருந்துள்ளது.
விஷவாயு தாக்குதல்:
இதனால், உள்ளே விழுந்த இளைஞர் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். உள்ளே சென்ற இளைஞர் மயக்கம் அடைந்ததை கண்டு மேலே இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, ஒருவரை ஒருவர் மீட்க உள்ளே சென்றபோது அவர்கள் அடுத்தடுத்து விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகினர்.
கிணற்றின் உள்ளே சென்ற 6 பேரும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகி, கிணற்றில் இருந்த தண்ணீரில் விழுந்தனர். இதையடுத்து, தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் கிணற்றில் விஷவாயு இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், கிணற்றின் உள்ளே இருந்த தண்ணீரை பம்ப் மூலமாக வெளியேற்றினர்.
6 பேர் மரணம்:
பின்னர், கிணற்றின் உள்ளே விழுந்த 6 பேரை மீட்டனர். ஆனால், பரிதாபம் அளிக்கும் விதமாக கிணற்றின் உள்ளே விழுந்த விஜய் மாணிக் காலே தவிர மற்ற அனைவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட விஜய் மாணிக் காலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றச் சென்று விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 3 மாதங்களில் 11 இந்தியர்கள் மரணம்! படிக்கச் சென்ற ஹைதரபாத் மாணவர் அமெரிக்காவில் உயிரிழப்பு!
மேலும் படிக்க: Crime: நெல்லையில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்!